பழுதடைந்த குடமுருட்டி பாலத்தால் வாகன ஓட்டிகள் அவதி-இடித்துவிட்டு புதிதாக கட்ட வலியுறுத்தல்

பாபநாசம் : பாபநாசம் அருகே பழுதடைந்த குடமுருட்டி பாலத்தால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே பாலத்தை இடித்துவிட்டு புதிதாக கட்ட வலிறுத்தப்பட்டுள்ளது.பாபநாசம் அருகே அய்யம்பேட்டை-கணபதி அக்ரஹாரம் சாலை முக்கியமான சாலையாகும். இந்த சாலையில் குடமுருட்டி, காவிரி பாலங்கள் உள்ளன.

காவிரி பாலம் நல்ல நிலையில் இருந்தும் புதிதாக பாலம் கட்டப்பட்டு வருகின்றது.

ஆனால் குடமுருட்டி பாலம் பழுதடைந்த நிலையில் இருந்தும் புதிதாக பாலம் கட்டப்படவில்லை. கணபதி அக்ரஹாரத்திலுள்ள பிள்ளையார் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

அய்யம்பேட்டையிலிருந்து திருவையாறு செல்பவர்கள் இந்த பாலத்தை கடந்துதான் செல்ல வேண்டும். மாகாளிபுரம், இலுப்பக்கோரை, உள்ளிக்கடை, பெருமாள் கோயில், மணலூர், சோமேஸ்வரபுரம், ஈச்சங்குடி. உள்ளிட்ட பல ஊர்களுக்கு செல்பவர்கள் இந்த பாலத்தை கடந்துத்தான் செல்ல வேண்டும். பாலம் பழுதுப்பட்டு நிற்பதால் இந்த பாலத்தை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் பயத்துடன் செல்கின்றனர்.இது குறித்து சமூக ஆர்வலர் மோகன சுந்தரம் கூறுகையில், 50 ஆண்டுகளை கடந்த பழுதடைந்த இந்த பாலத்தை கடந்து செல்லும் வாகன ஓட்டிகளின் நலன் கருதி இதை இடித்து விட்டு புதிதாக கட்ட வேண்டும் என்றார்.

Related Stories: