தூத்துக்குடியில் வாலிபர் கைது ரூ.5கோடி மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல்

தூத்துக்குடி: தூத்துக்குடியில் ரூ.5 கோடி மதிப்புள்ள ‘‘ஹஷீஷ்’’ என்ற போதை பொருளுடன் வாலிபர் கைது செய்யப்பட்டார்.  தூத்துக்குடியில் போதை பொருள் கடத்தல்  நடப்பதாக மதுரையில் உள்ள மத்திய போதை பொருள் தடுப்பு மற்றும் நுண்ணறிவுபிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து நேற்று முன்தினம் அதிகாரிகள் குழுவினர் தூத்துக்குடி வந்து பல்வேறு பகுதிகளில் விசாரணை நடத்தினர். தொடர்ந்து தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் பகுதியில் பதுங்கிய ஒரு வாலிபரை மடக்கினர். அவரிடம் இருந்து 5 கிலோ எடையிலான ஹஷீஷ் எனப்படும் கஞ்சா ஆயிலை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர் தூத்துக்குடியை சேர்ந்த ராஜேஷ் என்பது தெரியவந்தது.

அவரை கைது செய்து மதுரைக்கு கொண்டு சென்றனர். பிடிபட்ட போதைப்பொருள் ஹஷீஷின் சர்வதேச மதிப்பு ரூ.5 கோடி என கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த பிப்ரவரி 4ம் தேதி தூத்துக்குடி ஜார்ஜ் ரோட்டில் இருவரை மத்திய போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கைது செய்து ரூ.2.5 கோடி மதிப்பிலான 26 கிலோ சாரஸ் என்ற போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதில் தொடர்புடைய இரு வட இந்திய பெண்களை தேடிவருகின்றனர்.

Related Stories: