நம்பி வாக்களித்த மேற்கு வங்க மக்களுக்கு மம்தா துரோகம் செய்து விட்டார்: கொல்கத்தாவில் மோடி தாக்கு

கொல்கத்தா: ‘நம்பி வாக்களித்த மேற்கு வங்க மக்களுக்கு மம்தா அரசு துரோகம் செய்து அவமதித்து விட்டது’ என கொல்கத்தா பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசினார். மேற்கு வங்கத்தில் உள்ள 294 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி நேற்று தனது முதல் பிரசாரத்தை மேற்கொண்டார். கொல்கத்தாவில் பிரிகேட் பரேட் மைதானத்தில் நடந்த பாஜ கட்சியின் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: இடதுசாரிகள் ஆட்சி முடிவுக்கு வந்த பிறகு, மாற்றத்தை தருவார் என நம்பி மம்தா பானர்ஜிக்கு மேற்கு வங்க மக்கள் வாக்களித்தனர்.

ஆனால், அவர் மக்களுக்கு துரோகம் செய்து அவர்களை அவமதித்து விட்டார். மக்கள் நம்பியதைப் போல, மக்களின் சகோதரியாக (தீதி என அழைப்பார்கள்) மம்தா இருக்கவில்லை. அவரது மருமகனுக்கு நல்ல அத்தையாக மட்டுமே இருந்துள்ளார். (மம்தா தனக்குப் பிறகு தனது மருமகனான எம்எல்ஏ அபிஷேக்கை அடுத்த முதல்வராக காய் நகர்த்துவதை பிரதமர் மோடி குறிப்பிட்டார்). நாட்டின் 130 கோடி இந்தியர்களும் எனக்கு நண்பர்கள்தான். இங்குள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் வளர்ச்சியை நாங்கள் உறுதிபடுத்துவோம். ஊடுருவலை தடுத்து நிறுத்துவோம். மேற்கு வங்கத்தில் பாஜ.வால் மட்டுமே உண்மையான மாற்றத்தை கொண்டு வர முடியும்.  இவ்வாறு அவர் பேசினார்.

* பாஜவில் இணைந்த மிதுன் சக்கரவர்த்தி

பழம்பெரும் பாலிவுட் நடிகரும் திரிணாமுல் காங்கிரசின் முன்னாள் எம்பியுமான மிதுன் சக்கரவர்த்தி நேற்று பிரதமர் மோடி முன்னிலையில் பாஜவில் தன்னை இணைத்துக் கொண்டார். கடந்த 2014ல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து மாநிலங்களவை எம்பியாக தேர்வு செய்யப்பட்ட அவர் பண மோசடி வழக்கில் சிக்கினார். அந்த பணத்தை திருப்பி தந்த மிதுன், பின்னர் எம்பி பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார். தற்போது அவர் தன்னை பாஜவில் இணைத்துக் கொண்டுள்ளார். பிரசாரத்தில் அவர் பேசுகையில், தனது பழைய வங்க மொழி சினிமா பட பஞ்ச் டயலாக்கை பேசினார். ‘‘நான் ஒரு விஷப்பாம்பு. ஒரே கடியில் கதையை முடித்து விடுவேன்’’ என திரிணாமுல் கட்சியை எச்சரிக்கும் வகையில் கூறினார்.

Related Stories: