எந்த மூத்த குடிமகனும் தபால் ஓட்டு கேட்கவில்லை: முத்தரசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர்

தேர்தல் பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு தபால் வாக்கு போடும் உரிமை வழங்கப்பட்டது. அப்போதே குறிப்பிட்ட காலத்தில் வந்து தபால் வாக்குகளை அதற்கான பெட்டிகளில் போடுவதில்லை என்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் இருந்தது. இந்த தபால் ஓட்டிலேயே செல்லாத ஓட்டு என்று அறிவிப்பதும் நடக்கும். தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களின் வாக்குகளையே செல்லாத வாக்குகள் என்று அறிவிப்பதே பெரும் அதிர்ச்சியாக இருக்கும். தேர்தல் ஊழியர்கள் தான் சரியான வகையில் தபால் வாக்கை உறைகளில் வைத்து எந்த தொகுதி உள்ளிட்டவைகளை சரியாக கண்காணித்து பெட்டிகளில் போட வேண்டும். மறைமுக வாக்குப்பதிவு என்பதற்கு வழியே இல்லாமல் போய்விடுகிறது.

இதேபோல், வாக்கு எண்ணும் இடங்களிலும் முறைகேடு நடைபெறும். ஒருசிலர் தபால் ஓட்டை முதலில் எண்ணலாம் என்பார்கள். ஆனால், சிலர் கடைசியில் எண்ணலாம் என்பார்கள். இதிலேயும் குளறுபடிகளை செய்வார்கள். இறுதியில் தபால் ஓட்டு மூலம் ஒருவரின் வெற்றியை நிர்ணயிக்கும் ஒரு நிலையை ஏற்படுத்தி விடுவார்கள். எனவே, பலமுறை முறைகேடுகள் நடைபெற்றுள்ளது என்று புகார்கள் இருக்கின்றது. தபால் ஓட்டை நேரடியாக சென்று வாங்கி வரலாம் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்படுகிறது.

தேர்தல் ஆணையம் உத்தரவிட்டாலும் அரசு பணியாளர்கள் எல்லோரும் தமிழக அரசின் கீழ் தானே பணியாற்றுகிறார்கள். அப்படி இருக்கும் போது தமிழக அரசின் விருப்பத்தின் பேரில் தானே தபால் வாக்குகள் பதிவாகும். முன்பு இருந்ததை காட்டிலும் இப்போது முறைகேடு என்பது அதிகமாகவே இருக்கிறது. பாஜ ஆட்சியில் தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. மத்திய பாஜ அரசு தனக்கு ஏற்றபடி செயல்பட தேர்தல் ஆணையத்தை நிர்ப்பந்தம் செய்கிறது என்ற பரவலான குற்றச்சாட்டு நாடு முழுவதும் இருக்கிறது.

இப்படிப்பட்ட சூழலில் தேர்தல் ஊழியர்கள் மூலம் தபால் வாக்குகளை பெறுவது என்பது ஆளும் கட்சிக்கு ஆதரவான ஒரு யுக்தி என்றே பார்க்கலாம். 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்கு வேண்டும் என யாரும் கோரிக்கை வைக்கவில்லை. 108 வயது முதியவர் கூட நேரடியாக சென்று வாக்களித்தார் என்று தானே நாம் பார்த்திருக்கிறோம். நேரடியாக சென்று வாக்களிக்க தான் விருப்பப்படுகிறார்கள். வீட்டில் இருந்தபடியே வாக்களிக்கும் உரிமையை எங்களுக்கு கொடுங்கள் என்று இதுவரையில் நாட்டில் உள்ள எந்த குடிமகனும் கோரிக்கை வைக்கவில்லை.

இந்தசூழலில், அரசாங்கமே ஒரு முடிவை எடுத்து செயல்படுத்துவது என்பது உள்நோக்கம் உடையது. தபால் ஓட்டு மூலம் தங்களுக்கு சாதகமான ஒரு முடிவை கையில் எடுக்கிறார்கள். இது நல்லதல்ல. இது ஜனநாயகத்திற்கு ஏற்புடையது கிடையாது. எனவே, தேர்தல் பணியாளர்களுக்கு கூட தாங்கள் பணிபுரியும் இடத்திலேயே அவர்களின் தொகுதிகளுக்கான வாக்குபெட்டிகளை வைத்து நேரடியாக வாக்களிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும். வயதை காரணம் காட்டி தபால் வாக்கு என்பது ஏற்புடையது அல்ல. இதில் முறைகேடுகள் நடப்பதற்கு வாய்ப்புள்ளது. அரசாங்கமே ஒரு முடிவை எடுத்து செயல்படுத்துவது என்பது உள்நோக்கம் உடையது. தபால் ஓட்டு மூலம் தங்களுக்கு சாதகமான ஒரு முடிவை கையில் எடுக்கிறார்கள். இது நல்லதல்ல. இது ஜனநாயகத்திற்கு விரோதமானது.

Related Stories: