கமண்டல நாகநதி, செய்யாற்று படுகைகளில் தேர்தல் நேரத்தை பயன்படுத்தி இரவு, பகலாக மணல் கொள்ளை

* நிலத்தடி நீர்மட்டம் முழுமையாக பாதிப்பு

* மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

ஆரணி: ஆரணி சுற்றுவட்டார பகுதிகளில் இரவு, பகலாக நடக்கும் மணல் கொள்ளையை தடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஆண்டு நவம்பர்  மாதம் நிவர், புரெவி  மற்றும் வடகிழக்கு பருவமழை காரணமாக கனமழை பெய்தது. இதனால் மாவட்டத்தில் உள்ள சாத்தனூர், குப்பனத்தம், மிருகண்டா, செண்பகத்தோப்பு அணைகள் நிரம்பியது. அதேபோல், ஆரணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கமண்டல நாகநதி மற்றும் செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மணல் கொள்ளை குறைந்தது. தற்போது ஆறுகளில் தண்ணீர் குறைந்து வரும் நிலையில், எஸ்.வி.நகரம், தச்சூர், மொழுகம்பூண்டி, மோட்டூர், விண்ணமங்கலம், மோட்டூர், மாமண்டூர், ரகுநாதபுரம், சாணார்பாளையம், மேல்சீசமங்கலம், ஆரணி விஏகே நகர், புத்திரகாமேட்டீஸ்வர் கோயில் அருகே என ஆரணி பகுதிகளில் உள்ள கமண்டல நாகநதி, செய்யாற்று படுகைகளில் இரவு, பகலாக மணல் கொள்ளை நடைபெறுகிறது. மேலும், பகல் நேரங்களில் மணல் மாபியாக்கள் 200க்கும் மேற்பட்ட நபர்கள் மூலம் ஆறுகளில் குவியல் குவியலாக மணலை சலித்து சேகரித்து வைத்து, இரவு நேரங்களில் லாரி, டிராக்டர்கள், மாட்டு வண்டிகளில் கடத்துகின்றனர்.

மணல் திருட்டு குறித்து வருவாய்த்துறை, போலீசாருக்கு தகவல் தெரிவித்தாலும் தேர்தல் பணியை காரணம் காட்டி கண்டும்காணாமல் இருந்து வருவதாக புகார் எழுந்துள்ளது.

இதனால் நிலத்தடி நீர்மட்டம் முழுமையாக பாதிக்கப்பட்டு பல்வேறு கிராமங்களில் ஆழ்துளை கிணறு மற்றும் கிணறுகளில் நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடும், விவசாயமும் பாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு  தாலுகா காவல் நிலையத்தில் மணல் கடத்தலால் பறிமுதல் செய்த டிராக்டர் திருட்டுபோனது. அந்த டிராக்டர் 2 ஆண்டுகளுக்கும் மேலாக மணல் கடத்தலுக்கு பயன்படுத்தி வந்த நிலையில், கடந்த மாதம் அதன் உரிமையாளரே டிராக்டரை கண்டுபிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தது குறிப்பிடத்தக்கது. இதேபோல், மணல் கடத்தலுக்கு பயன்படுத்தும் திருட்டு வாகனங்கள் போலீசாரிடம் மாட்டிக் கொள்ளாமல் இருக்க அதிவேகமாக ஓட்டிச்செல்வதால் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதேபோல் சில தினங்களுக்கு முன்பு ஆரணி டவுன் புதுகாமூர் பகுதியில் உள்ள கமண்டல நாகநதியில் மணல் சலித்து கொண்டிருந்த நபர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். அப்போது, மணல் சலிக்கும் சல்லடை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது. பின்னர், அவர்களிடம் போலீசார்  பேரம் பேசி பணத்தை வாங்கி கொண்டு அவர்களை விடுவித்து, சல்லடையையும் கொடுத்து அனுப்பியது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: ஆரணி தாலுகா காவல் நிலையத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிதாக பொறுப்பேற்ற இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையிலான போலீசார், இரவு நேரங்களில் கடத்தி செல்ல வசதியாக ஆற்றில் குவியல், குவியலாக  சலித்து  வைத்திருந்த மணலை கண்டறிந்து, ஆற்றுப்பள்ளங்களில் மீண்டும் கொட்டி மூடி, மணல் கடத்தி செல்லும் பாதைகளில் பள்ளம் தோண்டி நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதனால் மணல் கடத்தல் முற்றிலுமாக தடுத்து நிறுத்தப்பட்டது. பின்னர், 30க்கும் மேற்பட்ட மணல் மாபியாக்களிடம் போலீசார் மீண்டும் கைகோர்த்து, மணல் கடத்தலுக்கு துணையாக இருக்கின்றனர். மணல் கடத்தல் மாபியாக்கள் ஒவ்வொருவரிடமும் மாதம் ₹1 லட்சம் வரை போலீசார்  பேரம் பேசி சப்-டிவிஷன் உயர் போலீஸ் அதிகாரி வரை மாமூல் கொடுக்கப்பட்டு வருகிறது.

இதனால் போலீசாருக்கு மாதம் மட்டும் ₹20 லட்சம் வரை மாமூல் கிடைக்கிறது. தாலுகா போலீசார் இரவு நேரங்களில் ரோந்து பணியில் கூட ஈடுபடுவதில்லை. இதனால் கமண்டல நாகநதி, செய்யாற்று படுகைளில் மணல் கொள்ளை படுஜோராக நடைபெற்று வருகிறது. இரவு, பகலாக தொடரும் மணல் கொள்ளையால் நீர்வளம் முழுமையாக பாதிக்கப்பட்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு முன்பு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தெருவிளக்குகள் அணைத்து பைக்குகள் திருட்டு

ஆரணி அடுத்த எஸ்.வி.நகரம் பகுதியில் இரவு நேரங்களில் தெருவிளக்குகளை அணைத்துவிட்டு மாட்டு வண்டி, டிராக்டர், லாரிகளில் மணல் கொள்ளையில் ஈடுபடுகின்றனர். தெரு விளக்குகள் அணைக்கப்படும் நேரத்தில் வாகனங்களில் பெட்ரோல் திருடப்படுகிறது. மேலும் கடந்த 2 மாதங்களில் மட்டும் 30க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள், சைக்கிள்கள் திருட்டு போய்விட்டது. இதுகுறித்து தாலுகா போலீசில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லையாம். புகார் அளிக்கும் மக்களை போலீசார் ஒருமையில் பேசி அனுப்புவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

Related Stories:

>