செவ்வாய் கிரகத்தில் முதல் முறையாக டெஸ்ட் டிரைவ் போனது அமெரிக்காவின் ரோவர்: நாசா மகிழ்ச்சி

லாஸ்ஏஞ்சல்ஸ்: செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய பெர்சவரன்ஸ் ரோவர் முதல் முறையாக 6.5 மீட்டர் நகர்ந்து சென்ற புகைப்படங்களை நாசா வெளியிட்டு மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, கடந்த மாதம் 18ம் தேதி பெர்சவரன்ஸ் ரோவரை செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறக்கி வரலாற்று சிறப்புமிக்க சாதனை படைத்தது. ரோவரின் ரோபோ கரங்கள், அறிவியல் உபகரணங்கள் சரியான முறையில் இயங்குகிறதா என ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். அதன் முக்கிய கட்டமாக ஆறு சக்கரங்களைக் கொண்ட ரோவர் முதல் முறையாக செவ்வாயில் நகர்ந்து செல்வதற்கான முயற்சி தற்போது மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

இதில், ரோவர் தனது சக்கரங்களுடன் 6.5 மீட்டர் தூரம் நகர்ந்து சென்றுள்ளது. 4 மீட்டர் முன்னோக்கியும் பின் 150 டிகிரி திரும்பி 2.5 மீட்டர் பின்நோக்கியும் வந்து புதிய இடத்தில் நின்றுள்ளது. அதன் காலடி தடப் புகைப்படங்களை நாசா நேற்று தனது டிவிட்டரில் பதிவிட்டு மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. செவ்வாயின் கரடு முரடான நிலப்பரப்பில் ரோவர் வெற்றிகரமாக நகர்ந்த செயல், இத்திட்டத்தின் மிகப்பெரிய மைல்கல் என நாசா விஞ்ஞானிகள் கூறி உள்ளனர். இந்த ரோவர் ஒரு நாளைக்கு சராசரியாக 200 மீட்டர் ஓடும் திறன் கொண்டது. செவ்வாய் கிரகத்தில் பாறை மாதிரிகளை துளையிட்டு சேகரித்து அதனை பூமிக்கும் கொண்டு வரும் பணியினை ரோவர் செய்ய இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: