வசந்தகுமார் மகன் விஜய்வசந்த் கேட்டுள்ள நிலையில் குமரியில் பிரியங்கா போட்டியிட கார்த்தி சிதம்பரம் விருப்ப மனு: 4,700 பேர் விண்ணப்பம் : இன்று முதல் நேர்காணல்

சென்னை:  திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி தங்களுக்கான தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதற்கிடையே, காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்பும் கட்சியினரிடம் விருப்ப மனுக்களை கடந்த 25ம்தேதி முதல் வாங்கி வருகிறது. சத்தியமூர்த்திபவனில் ஏராளமான காங்கிரசார் போட்டிப்போட்டு விருப்ப மனுக்களை வாங்கி பூர்த்தி செய்து கொடுத்துள்ளனர்.  நேற்றுடன் விருப்ப மனு வாங்குதல் நிறைவு பெற்றது. மொத்தமாக 4700 பேர் விருப்ப மனு கொடுத்துள்ளனர். கடைசி நாளான நேற்று முக்கிய தலைவர்களின் மகன்கள், முக்கிய நிர்வாகிகள் பலரும் போட்டிப்போட்டு விருப்ப மனு தாக்கல் செய்தனர். குறிப்பாக, கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு மறைந்த வசந்தகுமார் எம்பியின் மகன் விஜய் வசந்த் விருப்ப மனு நேற்று தாக்கல் செய்தார்.

 அவரை தொடர்ந்து, கார்த்தி சிதம்பரம் எம்பி, அந்த தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தார். அவரை தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்ட தலைவர் ஊர்வசி அமிர்தராஜ்  வைகுண்டம் தொகுதிக்கும், மாவட்ட தலைவர் நாஞ்சில் பிரசாத் ஆலந்தூர் தொகுதிக்கும், விக்டரி ஜெயக்குமார்  பெரும்புதூர் தொகுதிக்கும், அசன் மவுலானா தேனி தொகுதிக்கும், சுமதி அன்பரசு சோளிங்கர் தொகுதிக்கும் விருப்ப மனு தாக்கல் செய்தனர். அதேபோன்று ஈவிகேஎஸ்.இளங்கோவன் மகன், தங்கபாலு மகன், திருநாவுக்கரசர் மகனும் விருப்ப மனு தாக்கல் செய்தனர்.  இதனால் நேற்று காலை முதலே சத்தியமூர்த்திபவன் களைகட்டியிருந்தது. இன்றும், நாளையும்  விருப்ப மனு தாக்கல் செய்தவர்களுக்கு நேர்காணல் நடத்தப்படுகிறது. இதில் தொகுதி நிலவரம், கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து நேர்காணல் குழுவினர் கேள்வி எழுப்ப உள்ளனர்.

Related Stories: