கன்னியாகுமரி தொகுதியில் பாஜ போட்டி அமித்ஷா நாளை நாகர்கோவில் வருகை: கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை

நாகர்கோவில்: கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் பாஜ போட்டியிடுவதால் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை நாகர்கோவில் வருகிறார். கன்னியாகுமரியில் 6 சட்டமன்ற தொகுதிகளுடன், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.  அதிமுக கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி  கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிடும் என்று தெரிகிறது. இந்த தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை வழங்க, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை (7ம்தேதி) குமரி மாவட்டம் வருகிறார்.

அன்று காலை 9.30 மணிக்கு ஹெலிகாப்டரில் மறவன்குடியிருப்பு ஆயுதபடை மைதானத்தில் வந்திறங்கும் அவர் அங்கிருந்து கார் மூலம் 9.45க்கு சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோயில் புறப்படுகிறார். அங்கு தரிசனம் முடிந்து மீண்டும் நாகர்கோவில் வரும் அவர், இந்து கல்லூரி அருகே அம்மன் கோயிலில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அங்கிருந்து பின்னர் வேப்பமூடு வந்து, காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். அங்கிருந்து காரில் வடசேரி உடுப்பி ஓட்டல் செல்லும் அவர், அங்கு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனை கூட்டம் முடிந்து மதியம் 2 மணியளவில்  ஹெலிகாப்டரில் திருவனந்தபுரம் செல்கிறார்.

அமித்ஷா வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நாகர்கோவில் எஸ்.பி. அலுவலகத்தில் எஸ்.பி. பத்ரிநாராயணன் தலைமையில் நேற்று காலை நடந்தது.  இதில் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். அந்தந்த துறை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டம் முடிந்ததும் டெல்லியில் இருந்து வந்துள்ள பாதுகாப்பு படையினர், அமித்ஷா  செல்லும் இடங்களை ஆய்வு செய்தனர்.

Related Stories: