கோவையில் இரவு நேரங்களில் வீட்டின் கதவில் தொங்கும் அதிமுக பரிசு பொருட்கள்

கோவை: கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சின்னவேடம்பட்டி, விளாங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளின் கதவுகளில் இரவு நேரங்களில் அதிமுகவினர் பரிசு பொருட்களை தொங்கவிட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. ஆனால், மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அதிமுக-வினர் பரிசு பொருட்களை விநியோகம் செய்து வருவதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது. கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சின்னவேடம்பட்டி, விளாங்குறிச்சி, விநாயகபுரம் உள்ளிட்ட பகுதிகளில்  நள்ளிரவில் டூ-விலரில் வந்து அதிமுக-வை சேர்ந்தவர்கள் பரிசு பொருட்களை வீடுகளின் கதவு, கேட் ஆகியவற்றில் தொங்கவிட்டு சென்றுள்ளனர்.

இதில், ஒரு தட்டு, புடவை, வேஷ்டி ஆகியவை இருந்தது. பொதுமக்கள் தூங்கும்போது அவர்களின் வீடுகளின் முன்பு பரிசு பொருட்களை தொங்க விட்டு செல்லும் சம்பவம் தேர்தல் விதிமுறைகளை மீறிய செயல் எனவும், புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுப்பது இல்லை எனவும் திமுக-வினர் குற்றம்சாட்டி உள்ளனர். இதுகுறித்து திமுக கோவை மாநகர் மேற்கு மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் சுரேஷ் கூறியதாவது: விளாங்குறிச்சி, விநாயகபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் இரவு நேரங்களில் வீடுகளின் முன்பு பரிசு பொருட்களை அதிமுகவினர் தொங்க விட்டு சென்றுள்ளனர். நள்ளிரவு நேரங்களில் டூவிலரில் வந்து இப்படி பரிசு பொருட்களை வழங்கி வருகின்றனர். இதுதொடர்பாக, போலீசாருக்கு தகவல் அளித்தால், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளிடம் புகார் அளிக்குமாறு கூறுகின்றனர்.  பறக்கும் படையினர் சம்பவ இடத்திற்கு வர ஒரு மணி நேரமாகிறது. அதற்குள் எல்லாம் முடிந்து விடுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: