அடிப்படை வசதிகள் இல்லாமல் வாழும் இருளர் மக்கள்: 2021 தேர்தலுக்கு பின் விடிவு பிறக்குமா? எதிர் பார்ப்பு

காஞ்சிபுரம்: அடிப்படை வசதிகள் கிடைக்காத இருளர் இன மக்கள், நீர் நிலை ஓரங்களில் வசிக்கின்றனர். இவர்களுக்கு தமிழகத்தின் தற்போதைய 2021 தேர்தலுக்கு பின் விடிவு பிறக்குமா என எதிர் பார்க்கிறார்கள். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் ஏரிகள், குளங்கள் ஆகிய பகுதிகளின் ஓரத்தில், பனை ஓலைக் குடிசையில் இருளர் குடும்பங்கள் ஏராளமானோர் வசிக்கின்றனர். இவர்கள் பொதுவாக செங்கல் சூளை, அரிசி ஆலைகளில் கொத்தடிமைகளாக எவ்வித அடிப்படை வசதிகளும் கிடைக்காமல் வாழ்கின்றனர்.

மேலும், மரம் வெட்டி அதன்மூலம் தினமும் கிடைக்கும் ரூ.150,ரூ. 200 வருமானத்தில் பெரும்பாலான இருளர் இன குடும்பங்களின் வாழ்க்கை ஓடுகிறது. இவர்களின் மறுவாழ்வுக்கான எவ்வித வசதிகளும், உதவிகளும் இவர்களுக்கு இதுவரை அரசு சார்பில் செய்யவில்லை என கூறப்படுகிறது. அவர்களிடம், வாக்காளர் அடை.யாள அட்டை மட்டுமே உள்ளது. பிற அத்தியாவசியமான ஆதார் அட்டை, ரேஷன் அட்டை இல்லை. வெளி உலகத் தொடர்பற்று வாழும் இவர்களிடம், தேர்தல் நேரத்தில் மட்டும் வாக்கு கேட்டு சாரைசாரையாக பல்வேறு கட்சி வேட்பாளர்கள் வருவதாக கூறுகின்றனர். இதுகுறித்து இருளர் இன மக்களிடம் கேட்டபோது, வாக்குப்பதிவு இயந்திரத்தில் எப்படி வாக்களிப்பது என்று தெரியாது. ஆனால் தேர்தல் சமயத்தில் வாக்குச்சாவடி மையத்துக்கு எங்களை அழைத்து சென்று, அங்குள்ள ஒரு பெட்டியில் பச்சை நிற பட்டனை அழுத்த சொல்வார்கள்.  அதன் பிறகு கையில் நூறு ரூபாய் கொடுப்பார்கள் என கூறுகின்றனர்.

மேலும், அரசியல் தலைவர்கள் குறித்து கேட்டபோது, அவர்களுக்கு எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதாவை தெரிகிறது. ஆனால் தற்போது யார் முதலமைச்சர் என்பது கூட தெரியவில்லை. கருணாநிதியின் மகன்தான் முதல்வர் என்று நினைக்கிறேன் என யோசித்து கூறுகிறார்கள். தற்போது சினிமாவில் பிரபலமடைந்து அரசியலில் களம் காண பல்வேறு தலைவர்கள் முளைத்துள்ள நிலையில், இந்த மக்களுக்கு அவர்கள் பெயர் கூட தெரியாமல் இருக்கிறது. அது மட்டுமின்றி ரேஷன் கார்டு இல்லாததால் தமிழக அரசால் வழங்கப்பட்ட எந்த ஒரு இலவச பொருட்களும் இவர்களுக்கு கிடைக்கவில்லை. வெறும் உணவு பொருட்கள் மட்டுமே அரசால் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் சுமார் 1 லட்சம் பழங்குடியினர் வரும் சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர், இருளர் இன மக்களுக்கு வாக்களிக்க பிரத்யேகமான பயிற்சியும், மறுவாழ்வுக்கான உதவியும் செய்யவேண்டும். இதற்கு தனி அலுவலரை நியமித்து தினமும் எவ்வித விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அந்த விழிப்புணர்வு இம்மக்களுக்கு சென்றடைந்ததா என அடுத்தகட்ட பணிகள் குறித்து கண்காணிக்க வேண்டும் என  சமூக ஆர்வலர்கள் வலியுறுத்து கின்றனர்.

Related Stories:

>