கூகுள் பே, போன் பே, வங்கி பணப் பரிவர்த்தனைகள் கண்காணிக்கப்பட்டு வருவதாக தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு பேட்டி

சென்னை: கூகுள் பே,போன் பே மூலம் பணம் விநியோகம் செய்வதை தடுக்க வங்கிகள் மூலம் கண்காணிக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு பேட்டியளித்துள்ளார். தேர்தல் செலவின பார்வையாளர்கள் இரண்டு பேர் திங்கட்கிழமை தமிழகம் வருவதாகவும் சத்ய பிரதா சாகு தகவல் அளித்துள்ளார். பணப்பட்டுவாடா, வேட்பாளர் செலவினங்களை கண்காணிக்க செலவின பார்வையாளர்கள் வருகின்றனர்.

வங்கிகளில் பணப் பரிவர்த்தனை கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தகவல் அளித்துள்ளார். வாகன சோதனையில் நேற்று வரை பணம், பரிசு பொருட்களாக ரூ.15.20 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் நெட் பேங்கிங் மூலமாக பணமானது ஒரு குறிப்பிட்ட வங்கி கணக்குக்கு செலுத்தப்படும். ஆனால் இன்றைய சூழலில் மிகவும் எளிதாக கூகுள் பே, போன் பே மூலமாக பணத்தை அனுப்பி விட முடியும். ஒவ்வொரு தொகுதி, ஒவ்வொரு வார்டு அடிப்படையில் பல்வேறு அரசியல் கட்சிகள், இதற்கு முன்னதாக அந்த குறிப்பிட்ட பகுதியை சேர்ந்தவர்களுடைய தொலைபேசி எண்களை வாங்கிக்கொள்வார்கள்.

பின்னர் கூகுள் பே, போன் பே மூலமாக பணம் செலுத்துவதாக தேர்தல் ஆணையத்துக்கு புகார்கள் வந்தன. இதன் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட வங்கி கணக்கிலிருந்து பல்வேறு நபர்களுக்கு இதுபோன்ற டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்யப்படும் போது எந்த வங்கி கணக்கிலிருந்து பணம் செலுத்தப்படுகிறது என்பதை கண்காணிக்க வேண்டும். அதுதொடர்பான தகவல்களை உடனடியாக தேர்தல் ஆணையத்துக்கு வழங்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

Related Stories: