கொள்ளிடம் பகுதி நேரடி கொள்முதல் நிலையங்களில் 2 லட்சம் நெல் மூட்டைகள் தேக்கம்

கொள்ளிடம் : கொள்ளிடம் பகுதி நேரடி கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்த 2 லட்சம் நெல் மூட்டைகள் போதிய பாதுகாப்பின்றி அடுக்கி வைக்கப்பட்டுள்ளதால் சேதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் புத்தூர், ஆச்சாள்புரம், மாதானம், கடவாசல், எடமணல், பச்சைபெருமாநல்லூர், குன்னம், வடரங்கம், பனங்காட்டான்குடி, மாதிரவேளூர் உள்ளிட்ட பகுதிகளில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்துக்கு சொந்தமான 25 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளன.

இந்த கொள்முதல் நிலையங்களில் கடந்த 2 மாதமாக நெல் கொள்முதல் செய்யப்பட்டது. பின்னர் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் கொள்ளிடம் அருகே உள்ள எருகூர் நவீன அரிசி ஆலை கிடங்குக்கு எடுத்து செல்லப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 10 நாட்களாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்டுளள நெல் மூட்டைகளை ஏற்றி செல்ல நடவடிக்கை எடுக்க வில்லை.

இதனால் கொள்முதல் செய்யப்பட்டுள்ள நெல் மூட்டைகள் போதிய பாதுகாப்பின்றி அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. நெல் மூட்டைகளை மூடி பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் தார்ப்பாய்கள் இதுவரை கொள்முதல் நிலையங்களுக்கு வழங்காததால் நெல் மூட்டைகள் வெயிலில் காய்வதுடன், மழை வரும்போது நனைகிறது.

ஒரு வாரத்துக்கு முன் பெய்த மழையால் சில நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் சேதமடைந்தன. இதனால் கொள்முதல் செய்யப்பட்டுளள நெல் மூட்டைகள் எந்த பயனும் இன்றி வீணாகும் நிலை ஏற்படுவதுடன் அரசுக்கும் இழப்பும் ஏற்படும். எனவே கொள்ளிடம் பகுதி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பாதுகாப்பின்றி அடுக்கி வைக்கப்பட்டுள்ள 2 லட்சதுக்கு மேலான நெல் மூட்டைகளை உடனடியாக எடுத்து செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: