சுற்றுலா மாவட்டத்தில் அதிகாரிகள் அலட்சியத்தால் அனந்தன்குளத்தில் முடங்கிபோன படகு குழாம்

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் சுற்றுலாத் தலங்கள் அதிக அளவு உள்ளது. இதனால் வெளி மாவட்டம், மாநிலம், நாடுகளில் இருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக கன்னியாகுமரிக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிக அளவு வருகின்றனர். சுற்றுலாத்தலங்கள் அதிக அளவு இருந்தாலும், மேம்பாட்டு பணிகள் என்பது குறைவாகவே உள்ளது. இதனால் ஒரு சில சுற்றுலாத்தலங்களுக்கு மட்டுமே சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நிலை காணப்படுகிறது. இது ஒரு புறம் இருக்க ஆசாரிபள்ளம் அருகே உள்ள அனந்தன்குளத்தில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் படகுகள் விட்டு சுற்றுலா பயணிகளை கவர திட்டமிடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக கடந்த 2018ம் ஆண்டு குளம் தூர்வாரப்பட்டது. பின்னர் சுற்றுலாத்துறை அமைச்சர் வந்து படகுகள் இயக்கப்படும் என்று அறிவித்தார்.

இதேபோல தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் சுற்றுலா படகும் விடப்பட்டது. முதலில் அதிக அளவு மக்கள் வந்து படகில் சவாரி செய்தனர். நாட்கள் செல்ல செல்ல சுற்றுலா பயணிகளின் வருகை குறைய தொடங்கியது. திடீரென அங்கு கிடந்த படகுகள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது. இதனால் படகு குழாம் இயங்காமல் முடங்கி போனது. படகு குழாமில் போடப்பட்ட பலகைகள் உடைந்து சிதலம் அடைந்து காணப்படுகிறது. பல லட்சம் செலவில் தொடங்கப்பட்ட இந்த படகு சவாரியை மீண்டும் தொடங்கி போதிய அளவு சுற்றுலா பயணிகள் வருவதற்கு மாவட்ட நிர்வாகமும், சுற்றுலா வளர்ச்சி கழகமும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த பொது மக்கள் கூறியதாவது: கடந்த 2018ம் ஆண்டு குடிமராமத்தில் அனந்தன்குளம் தூர்வாரப்பட்டது.

பெரிய குளம் என்பதால், படகுவிட முடிவு செய்யப்பட்டு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் படகு விடப்பட்டது. போதிய அளவு சுற்றுலா பயணிகள் வருகை இல்லை என்று இந்த படகு குழாமை அதிகாரிகள் தற்போது மூடி உள்ளனர். ஆனால் இங்கு படகு போக்குவரத்தை வளர்ச்சி அடைவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தரப்பில் எந்த நடவடிக்கைகளையும் எடுத்ததாக தெரியவில்லை. அனந்தகுளத்திற்கு வந்து செல்லும் சாலையையும் செப்பனிடவில்ைல. அதே போல் சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் அளவிற்கு போக்குவரத்து வசதியையும் மாவட்ட நிர்வாகம் செய்து கொடுக்கவில்லை. சுற்றுலா வளர்ச்சி கழகமோ இந்த குளத்தை பற்றி மக்களுக்கு தெரியும் விதத்தில் விளம்பரம் எதுவும் செய்ததாக தெரியவில்லை. ஏதோ எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பெயரளவுக்கு தொடங்கினர்.  அதன் பிறகு எந்த யாரும் கண்டு கொள்ளவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து படகு குழாம் மூடப்பட்டுள்ளது. மொத்தத்தில் படகு குழாம் அமைக்கிறோம் என்ற பெயரில் பல லட்சத்தை வீணாக்கியது தான் அதிகாரிகள் செய்த சாதனை என்றனர்.

Related Stories:

>