அவசரகதியில் முதல்வர் எடப்பாடி தொடங்கிய மேட்டூர் உபரிநீர் திட்டத்திற்காக அணையின் கரை உடைப்பு

* 120 அடியை எட்டினால் அபாயம்

* பொறியியல் வல்லுநர்கள் குற்றச்சாட்டு

மேட்டூர்: அவசர கதியில் தொடங்கப்பட்ட மேட்டூர் உபரிநீர் திட்டத்திற்காக, அணையின் வலது கரை உடைக்கப்பட்டதால், நீர்மட்டம் 120 அடியாக உயரும்போது அணைக்கு பெரும் அபாயம் ஏற்படும் வாய்ப்புள்ளதாக பொறியியல் வல்லுநர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தெலங்கானா மாநிலத்தில் நீரேற்று திட்டங்கள் மூலம் மாநிலம் முழுவதும் பயன்பெறும் வகையில், பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நடைமுறை தமிழகத்திலும் பின்பற்றப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியை எட்டும் நேரங்களில், பலஆயிரம் கனஅடி தண்ணீர், உபரிநீராக வெளியேற்றப்பட்டு வீணாக கடலில் கலக்கிறது.

இப்படி கடலில் வீணாக கலக்கும் 0.50 டி.எம்.சி தண்ணீரை, நீரேற்று திட்டத்தின் மூலம் 100 ஏரிகளை நிரப்ப உபரி நீர் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் சேலம் மாவட்டத்தில் மேட்டூர், ஓமலூர், இடைப்பாடி மற்றும் சங்ககிரி ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளில் 4,240 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். மேலும் 48 கிராமங்களின் குடிநீர் தேவை பூர்த்தியடையும். நிலத்தடி நீர் மட்டமும் கணிசமாக உயரும். மேலும் மேட்டூர் அணை கட்டியதிலிருந்து அணை அமைந்துள்ள சேலம் மாவட்டத்திற்கும், அணைக்கு தங்களின் நிலங்களை விட்டுத்தந்த மேட்டூர் மக்களுக்கும், பாசன வசதிக்கான எந்த ஒரு திட்டமும் இல்லை.

alignment=

எனவே, உபரிநீர் பயன்பாட்டு திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது. இதன் காரணமாக 2019 ஜூலை 15ம் தேதி, பொதுப்பணித்துறை மானிய கோரிக்கையில் மேட்டூர் உபரிநீர் பயன்பாட்டுத்திட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்காக கடந்த ஆண்டு (2020) மார்ச் மாதம் ₹565 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கப்பட்டு, அடிக்கல் நாட்டப்பட்டது. தேர்தலுக்குள் பணியை முடிக்க அவசரம், அவசரமாக பணி தொடங்கப்பட்டது. தற்போது 60 சதவீத பணிகள் மட்டுமே நிறைவடைந்த நிலையில், கடந்த மாதம் 25ம் தேதி அவசரம், அவசரமாக திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார். இது ஒருபுறமிருக்க, மேட்டூர் அணை இன்னும் நிரம்பவில்லை.

உபரிநீர் வந்தால் மட்டுமே ஏரிகளுக்கு திருப்பப்படும் என்பதே இந்த திட்டத்தின் முக்கிய அம்சம். ஆனால் அணையின் நீர் மட்டம் 103 அடியாக இருந்த போதே, திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. நீர்த்தேக்கப்பகுதியில் உள்ள வலது கரைப்பகுதியான மலையை உடைத்து, தண்ணீரை திப்பம்பட்டி பிரதான நீரேற்று நிலையத்திற்கு கொண்டு வந்து பம்ப் மூலம் ஏரிக்கு அனுப்பியுள்ளனர். மேச்சேரி அடுத்த எம்.காளிப்பட்டி ஏரிக்கு வந்த தண்ணீருக்கு மலர் தூவி, முதல்வர் வணங்கினார். பின்னர் அங்கிருந்து சென்னை புறப்பட்டார். முதல்வர் சென்ற சிறிது நேரத்திலேயே, ஏரிக்கு வந்து கொண்டிருந்த காவிரிநீர் நிறுத்தப்பட்டது.

இத்திட்டத்திற்காக, எம்.காளிப்பட்டி ஏரியில் அவசர கதியில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது. ஆனால் ஏரியில் உள்ள கோயில் மற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. திப்பம்பட்டியிலிருந்து 12 கிமீ தொலைவில் உள்ள எம்.காளிப்பட்டி ஏரி வரை மட்டும், குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இந்த ஏரியில் தண்ணீரை நிரப்ப 940 குதிரைத்திறன் கொண்ட 10 மின் மோட்டார்கள் மூலம் நீரேற்றம் செய்து, 2.20 மீட்டர் விட்டமுள்ள குழாயின் வழியாக விநாடிக்கு 126 கனஅடி வீதம், எம்.காளிப்பட்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டுவரவும், அங்கிருந்து 23 ஏரிகளுக்கு நீரை கொண்டு செல்லவும் திட்டமிடப்பட்டுள்ளது. அந்த ஏரிகளுக்கு நீரை கொண்டு செல்ல இன்னமும் குழாய்கள் பதிக்கப்படவில்லை.

கால்வாய் மட்டும் தோண்டப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கரைகள் பலப்படுத்தப்படவில்லை. அதேபோல், வெள்ளாளபுரம் ஏரியில் துணை நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டு, 640 குதிரைத்திறன் கொண்ட 4 மின்மோட்டார்கள் மூலம், 5.50 கிமீ தொலைவில் உள்ள வடுகப்பட்டி கீழ் நிலை நீர்தேக்க தொட்டிக்கும் நீர் கொண்டு செல்லப்படுகிறது. எம்.காளிப்பட்டி தொகுப்பிலிருந்து கண்ணந்தேரி ஏரியின் துணை நீரேற்று நிலையம் மூலம், 30 ஏரிகளுக்கு உபரிநீர் வழங்கப்படவுள்ளது. திப்பம்பட்டி பிரதான நீரேற்று நிலையத்திலிருந்து 12 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நங்கவள்ளி ஏரிக்கு, தண்ணீர் கொண்டு சென்று 33ஏரிகள் மற்றும் குட்டைகளுக்கு உபரிநீர் கொண்டு செல்லப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

alignment=

ஆனால், இதற்கான பணிகள் எதுவும் முழுமை பெறவில்லை. இது குறித்து பொறியியல் வல்லுநர்கள் கூறுகையில், ‘‘எந்தவித தொழில்நுட்ப ஆலோசனையும் இன்றி, தற்போதைய அணையில் இருக்கும் தண்ணீரின் கொள்ளளவை மட்டும் வைத்து, அணையின் கரை பகுதியை குடைந்து திறப்பு விழாவுக்காக தண்ணீரை கொண்டு வந்துள்ளனர். இதனால் மேட்டூர் அணை நீர் மட்டம் 120 அடியை எட்டும்போது, அந்த பகுதி உடைந்து அங்குள்ள கிராமங்கள், பொதுமக்கள் பெரிய ஆபத்திற்கு தள்ளப்படுவார்கள். தண்ணீரின் அளவு உயரும்போது பெரும் அபாயம் ஏற்படும் என்பதை கணக்கில் கொள்ளவில்லை’’ என்றனர்.

இடைப்பாடிக்காக மட்டுமே தொடங்கிய மோசடி திட்டம்: செல்வகணபதி குற்றச்சாட்டு

சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி கூறுகையில், ‘‘தோல்வி பயத்தின் காரணமாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவசர கதியில் முடிவடையாத திட்டங்களை முடிந்ததாக கூறி, அவசரமாக திறப்பு விழா நடத்தியுள்ளார். இது, மேட்டூர் அணையில் இருந்து காவிரி உபரிநீரை இடைப்பாடிக்கு மட்டும் கொண்டு செல்லும் திட்டம். 75சதவீத பணிகள் இன்னும் முடிவடையவில்லை. பைப் லைன் பதிக்கவில்லை, கால்வாய் வெட்டவில்லை. ஏரிகளை இணைக்கவில்லை. அனைத்து பணிகளும் நிலுவையில் இருக்கிறது.

ஆனால், உபரிநீரை எல்லா ஏரிக்கும் திறந்து விட்டதாக பொய் மூட்டையை அவிழ்த்துவிட்டுள்ளார். அதேபோல் காளிப்பட்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டு வரும்போது, மேச்சேரி ஒன்றியம், ஓமலூர் ஒன்றியங்களில் உள்ள பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை புறக்கணித்துவிட்டு, இடைப்பாடிக்காக மட்டும் திட்டம் முடிவடையாத நேரத்தில், தண்ணீரை கொண்டு செல்வது பெரும் மோசடியாகும்,’’ என்றார்.

வெடி வைத்து தகர்த்து கரையை உடைத்தனர்

மேட்டூர் அணையின் உபரிநீரை எடுப்பதற்காக, அணையின் நீர்மட்டம் 120 அடியாக உயர்ந்த பிறகு, அதில் இருந்து தண்ணீர் எடுக்கும் வகையில், கால்வாய் அமைக்கப்பட வேண்டும். ஆனால், அணையின் நீர்மட்டம் 103 அடியாக இருக்கும் போதே, இத்திட்டத்தை செயல்படுத்தி விட்டதாக காட்டும் வகையில், பல பாறைகளை வெடி வைத்து தகர்த்து, கரைகளை சேதப்படுத்தி, தண்ணீர் எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தண்ணீரை எடுத்தது, பின்னாளில் பல சிக்கல்களை ஏற்படுத்தும் என பொறியாளர்கள் தெரிவித்தனர்.

கரைகளை உடைத்து கால்வாய் தோண்டிய விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததால் இரண்டு நாட்களுக்கு முன்பு உடைக்கப்பட்ட இடத்தில் மண் கொட்டப்பட்டு தற்காலிகமாக  அடைக்கப்பட்டுள்ளது. மேலும், இப்பணி நடைபெறும் பகுதிக்கு யாரும் செல்ல முடியாத வகையில், தடுப்புகளும் போடப்பட்டு கண்காணிப்புக்கு பாதுகாவலர்களும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

Related Stories: