செங்கல்பட்டு சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலையை கடந்தும் கடும் பனிப்பொழிவு: வாகன ஓட்டிகள் அவதி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு சுற்று வட்டார பகுதிகளில், அதிகாலை நேரத்தை கடந்த பின்னரும், கடும் பனிப்பொழிவு ஏற்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் சாலை தெரியாமல் கடும் சிரமத்துடன் வாகனங்களை இயக்கி செல்கின்றனர்.

தட்பவெப்ப நிலை மாறுபாடு காரணமாக, செங்கல்பட்டு மாவட்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவு காணப்படுகிறது. அதிகாலை நேரங்களில் நிலவும் இந்த பனிப்பொழிவு, காலை 8 மணியை கடந்த பின்னரும், தொடர்ந்து நீடிக்கிறது. இதனால், பொதுமக்கள் கடும் அவதியடைகின்றனர். முக்கியமாக, வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைகின்றனர்.

சாலை முழுவதும் பனிமூட்டம் காரணமாக, எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல், பனி சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், முகப்பு விளக்கை ஒளிரவிட்டு செல்கின்றனர். மறைமலைநகர், சிங்க பெருமாள்கோயில், மதுராந்தகம், திருப்போரூர், திருக்கழுக்குன்றம், கல்பாக்கம் உள்பட பல பகுதிகளில், காலை நேரங்களில், கடுமையான பனிப்பொழிவு காணப்படுகின்றது. இதனால், இவ்வழியாக செல்லும் பஸ், லாரி போன்ற கனரக வாகனங்கள் உட்பட அனைத்து வாகனங்களும் மெதுவாக இயக்கப்படுகின்றன. கடும் பனிப்பொழிவு காரணமாக, வாகன ஓட்டிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு உரிய நேரத்தில் செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.

Related Stories: