தமிழகத்தில் வழங்கப்படும் 69% இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி: தமிழகத்தில் வழங்கப்படும் 69% இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 69% இட ஒதுக்கீடு என்பது பின்பற்றப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் தான் 69% இட ஒதுக்கீடு என்பது இருக்கின்றது. இதற்கு எதிராக காயத்ரி, சஞ்சனா, அகிலா, அன்னப்பூரணி உள்ளிட்ட சில மாணவிகள் சார்பாகவும் மற்ற சில பொதுநல மனுக்களாகவும் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு ஒருபுறம் நடந்து வந்த நிலையில் மராத்தா இட ஒதுக்கீடு என்ற மராட்டிய மாநிலத்தில் நடைபெற கூடிய இட ஒதுக்கீட்டிற்கு எதிரான வழக்குகள் உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்விற்கு மாற்றப்பட்டிருந்தது. எனவே இந்த 69% இட ஒதுக்கீடு வழக்கையும் அரசியல் சாசன அமர்விற்கு மாற்றி விசாரிக்க வேண்டும் என கோரிக்கைகள் வைக்கப்பட்டு இடைக்கால மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த இடைக்கால மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் இன்றைய தினம் தீர்ப்பினை வழங்கி இருக்கிறார்கள். 69% இட ஒதுக்கீட்டு வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற முடியாது என திட்டவட்டமாக கூறிய நீதிபதிகள் இந்த மராத்தா இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கு விசாரணையை உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரித்து தீர்ப்பு வழங்கும் வரை இந்த 69% இட ஒதுக்கீடு வழக்கை மேற்கொண்டு விசாரிக்க தேவையில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.

ஏற்கனவே இந்த வழக்கில் கடந்த வாரம் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனுவை தாக்கல் செய்திருந்தனர். குடியரசு தலைவரின் ஒப்புதலுடன் தமிழகத்தில் 69% இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே தமிழகத்திற்கு மட்டும் தான் சிறப்பு அதிகாரம் இருக்கிறது. இந்த வழக்குகள் தேவை இல்லாமல் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே இவற்றை தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை வைத்திருந்த நிலையில் தற்போது உச்சநீதிமன்றம் இத்தகைய மறுப்பினை கொடுத்திருக்கிறார்கள்.

Related Stories:

>