அரசியல் லாபத்துக்காக நிறைவேற்றம் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடுக்கு தடை கோரி வழக்கு: ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை

சென்னை: வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி இயற்றப்பட்ட சட்டத்தின்  அடிப்படையில் நடவடிக்கை எடுக்க தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீத ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி, கடந்த பிப்ரவரி 26ம் தேதி தமிழக சட்டமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து தென்நாடு மக்கள் கட்சி நிறுவனர் கணேசன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ள 20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியர், வன்னிய கவுண்டர், வன்னிய குல ஷத்திரியர் என ஏழு பிரிவினருக்கு 10.5 சதவீத உள்இட ஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

சாதிவாரி மக்கள் கணக்கெடுப்பு பணிகள் துவங்கி உள்ளதால் ஆறு மாதங்களுக்கு தற்காலிகமாக இந்த இட ஒதுக்கீடு வழங்கப்படுவதாக அந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பை முடிக்காமல் எப்படி இந்த சட்டம் இயற்றப்பட்டது என்பது கேள்விக்குறியாக உள்ளது. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில்,  68  சாதிகளைக் கொண்ட சீர் மரபினர் பிரிவினருக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடும் வழங்கப்படுகிறது. இந்தநிலையில்,   வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியதன் மூலம் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ள 22 சாதிகளுக்கு வெறும் 2.5 சதவீத இட ஒதுக்கீடு மட்டுமே கிடைக்கும். உண்மையிலே வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று எண்ணம் இருந்திருந்தால் அதை முன்கூட்டியே செய்திருக்கவேண்டும்.

தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் லாபத்திற்காக, இந்த சட்டம் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு ஒரு சில மணி நேரத்திற்கு முன்பு பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே, இந்த சட்டத்தின் அடிப்படையில் எந்த நடவடிக்கையும்  எடுக்க கூடாது என தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: