தேர்தல் பறக்கும் படையினர் சோதனை தமிழகம் முழுவதும் 1 கோடி பறிமுதல்

கடலூர்: பெங்களூர் தொழில் அதிபரிடம் 51 லட்சம் உள்பட பலரிடம் 1 கோடியை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்களை கொடுப்பதை தடுக்கும் வகையில், தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் வருவாய்த்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். கடலூர் ஆல்பேட்டை செக்போஸ்ட் அருகே நேற்று வாகன சோதனை  அதிகாரிகள் நடத்தினர். அப்போது பெங்களூரில் இருந்து புதுச்சேரி வழியாக கடலூர் நோக்கி வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அதில் பெங்களூரை சேர்ந்த தொழிலதிபர் ராம்நாத்பிரசாத் (55) இருந்தார். அவரிடம் ரூ.51 லட்சம் பணம் இருந்தது. இந்த பணத்தை கடலூர் சிப்காட் தொழிற்பேட்டைக்கு தொழில் ரீதியாக எடுத்து சென்றதாக தெரிவித்தார். உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.  

தேனி மாவட்டம், தேவதானப்பட்டி வைகை அணை சாலையில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் ஜோதி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பழனிச்செட்டிபட்டியை சேர்ந்த ஓய்வு பெற்ற எல்லை பாதுகாப்பு படை வீரர் செந்தில் (49), அவரது மனைவி கனிமொழி (45) ஆகியோர் வந்த காரை மறித்து சோதனை செய்தனர். அதில், ரூ.10.90 லட்சம் பணம் இருந்ததும், கோவையில் நகை வாங்க பணம் கொண்டு செல்வதாகவும் தெரிவித்தனர். ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்து பெரியகுளம் சார் கருவூலத்தில் ஒப்படைத்தனர். இதேபோல், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே மாத்தூர் பகுதியில் 10.50 லட்சமும், காரைக்குடி அருகே கண்டனூரில் ரூ.2 லட்சமும் சுண்ணாம்பு காளவாசல் பகுதியில் ரூ.6 லட்சத்து 50ஆயிரத்தையும், முத்துப்பட்டியில் ரூ.2.67 லட்சத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதுதவிர, வேலூர் மாவட்டத்தில் அலமேலுமங்காபுரத்தில் வியாபாரி ஒருவரின் காரில் 3.5 லட்சம், நீலகிரி மாவட்டத்தில், கூடலூர் அடுத்த நாடுகாணி சோதனைச்சாவடியில் ஒரு லாரியில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.3.30 லட்சம், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மெட்டாலா பகுதியில் கோழி வியாபாரிகளிடம் இருந்து 6.55 லட்சம் ஆகியவற்றையும் உரிய ஆவணங்கள் இல்லாததால் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட மொத்தம் ரூ1 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: