அரசு டாக்டர்களின் கோரிக்கையை கண்டுகொள்ளாத அதிமுக அரசு: அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்ட குழு தலைவர் பெருமாள் பிள்ளை

நாட்டிலேயே தமிழக சுகாதாரத்துறை தான் மக்களுக்கு சிறப்பான சிகிச்சை தருகிறது என்று பெருமையாக பேசுகின்றனர். உண்மையில் இன்னும் சுகாதாரத்துறை கட்டமைப்பை நன்றாக மேம்படுத்தலாம் என்று கூறினால், அதை காது கொடுத்து கேட்பதில்லை . நோயாளிகளுக்கு எண்ணிக்கைகேற்ப டாக்டர்கள் பணியிடங்கள் இருக்க வேண்டும் என்பது எங்களது பிரதான கோரிக்கை. அந்த மாதிரி இருந்தால் மக்கள் தான் பயன்பெறுவார்கள். கிட்டத்தட்ட 7 கோடி மக்கள் தமிழகத்தில் உள்ளனர். இதில், மற்ற மாநிலத்தை ஒப்பிடுகையில் தமிழகத்தில் தான் அதிகம் அரசு மருத்துவமனைகளை பயன்படுத்துகின்றனர். மற்ற மாநிலத்தை ஒப்பிடுகையில் இங்கு தான் மருத்துவ நிபுணர்கள் உள்பட எல்லாமே உள்ளனர்.

ராஜீவ் காந்தி மருத்துவமனையில், அபாய கட்டத்தில் நோயாளிகள் சென்றால் கூட அவர்களுக்கு அனைத்து விதமான சிகிச்சை தரும் வசதிகள் தமிழகத்தில் உள்ளது. இந்த அளவுக்கு இருக்கும் நிலையில் அந்த மருத்துவ நிபுணர்களுக்கு கொடுக்கும் சம்பளம் என்பது மிக, மிக குறைவு. 19 வருடத்துக்கு பிறகு தான் டாக்டர்கள் ரூ.1 லட்சம் ஊதியத்தையே கண்ணில் பார்க்க முடிகிறது. ஒரு பக்கம் எம்பிபிஎஸ் சேருவதற்கு கடும் போட்டிக்கு பிறகு தான் உள்ளே படிக்கவே நுழைய முடிகிறது. அவ்வளவு கஷ்டப்பட்டு சேர்ந்து அரசு மருத்துவர்கள் என்று சேர்ந்து விட்டால் எங்களை அடிமை மாதிரி தான் வைத்துள்ளனர். சுகாதாரத்துறை நன்றாக நடக்கிறது. அரசு மருத்துவர்கள் உறுதுணையாக இருக்கின்றனர் என்று முதல்வர், அமைச்சர்களே பேசுகின்றனர். ஆனால், அந்த அரசு மருத்துவர்களின் கோரிக்கை எதையும் இவர்கள் நிறைவேற்றி தரவில்லை.

மற்ற மாநிலத்தில் உள்ள டாக்டர்களை விட, இங்கும் இருக்கும் சிறப்பு சிகிச்சை மருத்துவ நிபுணர்கள் குறைந்த அளவில் தான் ஊதியம் பெறுகின்றனர். அதை தான் எங்களால் ஜீரணிக்கவே முடியவில்லை. மருத்துவ கவுன்சில் விதி என்னவென்றால், எத்தனை எம்பிபிஎஸ் மாணவர்கள் சேருகின்றார்களோ அதற்கு தகுந்த அளவு அரசு மருத்துவ பேராசிரியர்கள் இருக்க வேண்டும். இது குறைந்தபட்சம் தான். தனியார் மருத்துவ கல்லூரி என்றால் அங்கு நோயாளிகள் வருகிற எண்ணிக்கை குறைவாக இருக்கும். அரசு மருத்துவ கல்லூரிக்கு வரும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகமாகி விடும். நாங்கள் எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பது மட்டும் கிடையாது.

நாங்கள் நோயாளிகளையும் பார்க்க வேண்டும். அவர்களை சாதாரணமாக அனுப்பி விட முடியாது. மிகவும் பாதிக்கப்பட்ட நோயாளிகளை கவனமாக பார்த்து அவர்களுக்கு சிகிச்சை தர வேண்டும். ஐசியூ அனுப்ப வேண்டிய நோயாளிகளாக இருந்தால், அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு சிகிச்சை நிபுணர்கள் வேண்டும். இருக்கிற டாக்டர்களை வைத்து பார்க்க முடியாது. இந்த மாதிரியான சூழல் தமிழகம் முழுவதும் உள்ளது. இதனால், தான் நோயாளிகளின் எண்ணிக்கைக்கேற்ப டாக்டர்கள் நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை வலுவாக வைக்கப்பட்டுள்ளது. கொரோனாவில் உயிரிழந்த மருத்துவர்களுக்கு ரூ.50 லட்சம் தரப்படும் என்று முதல்வர் அறிவித்தார். தற்போது வரை இந்த நிதி தரவில்லை. திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு மருத்துவமனையில் டாக்டர் விஜய் ஆனந்த் வேலை செய்து வந்தார். அவருக்கு 40 வயது தான்.

இந்த நிலையில் கொரோனா காரணமாக அவர் உயிரிழந்தார். இன்று வரை அவரது குடும்பத்தை யாருமே திரும்பி பார்க்கவில்லை. இது, எங்களுக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது. எல்லையில் இருக்கும் ராணுவ வீரர்கள் இறந்தால் அவர்களுக்கு உரிய மரியாதை தருவார்கள். அது போன்று கொரோனா போரில் உயிரிழந்த டாக்டர்களுக்கு எந்த மரியாதையும் இல்லை. கொரோனா தொற்று ஏற்பட்ட டாக்டர்களுக்கு ரூ.2 லட்சம் அறிவித்தனர். அதுவும் தரவிப்படவில்லை. கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டவர்களுக்கு ஒரு மாதம் சிறப்பு ஊதியம் தரப்படும் என்று தெரிவித்தனர். அதையும் தரவில்லை.

கர்நாடகா மாநிலத்தில் அரசு டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்தனர். அப்போது போராட்டத்துக்கு முன்பே அந்த மாநில சுகாதாரத்துறை அமைச்சர், டாக்டர்கள் பணியை பாராட்டி அவர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்குகிறோம் என்று அறிவித்தனர். ஆனால், நாங்கள் 2019 முதல் போராட்டம் நடத்தினோம். நாங்கள் போராட்டம் நடத்தியபோது, சுகாதாரத்துறை அமைச்சர் 6 வாரத்தில் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவோம் என்று கூறினார். ஆனால், எங்களது கோரிக்கை நிறைவேற்றவில்லை. அதன்பிறகு போராட்டம் நடத்தினோம். அப்போது, முதல்வர் எங்களது கோரிக்கையை நிறைவேற்றுவதாக அறிவித்தார். ஆட்சி முடியும் தருவாயில் எங்களது கோரிக்கை நிறைவேற்றப்படாமல் போய் விட்டனர்.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சரை பொறுத்தவரையில் எங்களுக்கு எதுவும் செய்து தரவில்லை. கிராமங்களில் 3 ஆண்டுகள் வேலை செய்து விட்டு முதுநிலை படிக்க மாணவர்கள் வருகின்றனர். அந்த மாணவர்களுக்கு கலந்தாய்வின் போது முன்னுரிமை அடிப்படையில் முதுநிலை படிப்பில் சேர்க்கப்பட்டனர். ஆனால், நீட் வந்த பிறகு தற்போது அந்த மாணவர்களுக்கு முதுநிலை படிப்பில் சேர முன்னுரிமை அளிக்கப்படுவதில்லை. இதனால், எதிர்காலத்தில் தமிழகத்தில் அரசு பணியில் இருக்க சிறப்பு சிகிச்சை நிபுணர்கள் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது. எல்லோரையும்

அரசு பட்ட மேற்படிப்பில் 50 சதவீதம் இட ஒதுக்கீட்டை மறுபடியும் கொண்டு வர வேண்டும்.

அரசு கவனத்துக்கு கொண்டு போய் அவர்கள் சீரியஸாக எடுத்து கொள்ளவில்லை. இப்பிரச்சனைக்கு முடிவு கட்டாவிட்டால் தனியார் மருத்துவமனையில் தான் சிறப்பு சிகிச்சை நிபுணர்கள் இருப்பார்கள். அரசு மருத்துவமனைகளில் வருங்காலத்தில் யாரும் இல்லாத சூழ்நிலை தான் இருக்கும். அரசு டாக்டர்களின் உழைப்பால் தான் தமிழக சுகாதாரத்துறை சார்பில் மத்திய அரசிடம் பல்வேறு விருதுகளை பெற்றது. அப்படி பல விருதுகளை வாங்கி கொடுத்த டாக்டர்களை அதிமுக அரசு புறக்கணித்தது தான் வேதனையாக உள்ளது.

Related Stories: