சுற்றுலா தளங்களை சுற்றிப்பார்க்க டபுள் டக்கர் பேருந்து சேவை அறிமுகம்: அமைச்சர் தொடங்கி வைத்தார்

மைசூரு: ஹம்பி மற்றும் மைசூரு சுற்றுலா தளங்களை சுற்றி பார்க்க வசதியாக ”லண்டன் பிக் பஸ்” போன்ற 6 டபுள் டக்கர் பேருந்து சேவையை(அம்பாரி) சுற்றுலாத்துறை அமைச்சர் சி.பி.யோகேஷ்வர் தொடங்கி வைத்தார். உலக புகழ்பெற்ற சுற்றுலா தளங்களான ஹம்பி மற்றும் மைசூருவில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு வரும் பயணிகளுக்கு அதிநவீன வசதி கொண்ட லண்டன் பிக்பஸ் போன்று திறந்த வெளி டபுள் டக்கர் சொகுசு பேருந்துகளை கர்நாடகத்தில் அறிமுகப்படுத்துவதற்காக கடந்த பட்ஜெட்டில் ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து முதல் கட்டமாக 6  டபுள் டக்கர் சொகுசு பேருந்துகள் தயாரிக்கப்பட்டது.

இந்த பேருந்துகளை சுற்றுலா பயணிகளின் ரசனைக்கேற்ப லண்டன் பிக்பஸ் போன்று அனைத்து வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து சேவையை சுற்றுலாத்துறை அமைச்சர் சி.பி.யோகேஷ்வர் நேற்று தொடங்கி வைத்தார்.

இந்த பேருந்துகள் மைசூருவில் உள்ள ஹோட்டல் மயூரா ஒய்சாலா, கலெக்டர் அலுவலகம், கிராக்பெண்டர் ஹால், குக்கரஹள்ளி ஏரி, மைசூரு பல்கலைக்கழகம், அருங்காட்சியகம், ராமசாமி சர்க்கிள், அரண்மனை வட்டம், சாமுண்டி விஹார் ஸ்டேடியம், சங்கொல்லி ராயண்ணா வட்டம், செயின்ட் பிலோமினா தேவாலயம், பன்னிமண்டபம் ரயில் நிலையம் - ஹோட்டல் மயூரா ஒய்சாலா ஆகிய வழித்தடங்களில் அரைமணி நேரத்திற்கு ஒருமுறை இப்பேருந்து இயக்கப்படுகிறது.

இந்த டபுள் டக்கர் திறந்த வெளி சொகுசு பேருந்தில் பயணம் செய்ய ஒரு சுற்றுலா பயணிக்கு ரூ.250 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

* பட்ஜெட்டில் சிறப்பு நிதி

மைசூருவில் நேற்று அமைச்சர் சிபி யோகேஸ்வர் செய்தியாளர்களிடம் கூறுகையில், புகழ்பெற்ற சுற்றுலாதலங்கள் அதிகம் உள்ள மாநிலமான கர்நாடகத்தில் மைசூரு உள்பட நான்கு இடங்களில் விரைவில் புலிகள் சுற்றுலா ஆரம்பிக்கப்படும். இதுகுறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படும். மைசூருவில் உள்ள ஓட்டல்களை வணிகத்திலிருந்து தொழில்துறைக்கு மாற்றப்படும். இதன் மூலம் சுற்றுலாத்துறையின் வருமானம் அதிகரிக்கப்படும். மைசூருவில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சாலை மற்றும் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும். கேரளாவை போன்று சாலைகளை மேம்படுத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்த முறை சுற்றுலா வளர்ச்சிக்காக பட்ஜெட்டில் சிறப்பு நிதி ஒதுக்க வாய்ப்புள்ளது என்றார். இதையடுத்து அமைச்சராக பொறுப்பேற்ற பின் முதன்முறையாக ஜெயலட்சுமிபுரத்தில் உள்ள பாஜ எம்பி சீனிவாச பிரசாத்தின் வீட்டிற்கு சென்ற சி.பி.யோகேஷ்வர் அவரை சந்தித்து பேசினார்.

Related Stories: