வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடுக்கு கவுண்டர்கள் கடும் எதிர்ப்பு: கொங்கு கோட்டையில் விழுந்தது ஓட்டை: தேர்தலில் பிரதிபலிக்கும் என அதிமுகவுக்கு எச்சரிக்கை

சென்னை: மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கா பிரிவில்(எம்.பி.சி) வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கியதற்கு கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த கவுண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ெகாங்கு அதிமுகவின் கோட்டை என்பதில் தற்போது பெரிய ஓட்டை விழுந்தது. தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கிய நேரத்தில் கூட்டணிக்காக பாமக நிறுவனர் ராமதாஸ் கொடுத்த நெருக்கடிக்கு பணிந்து, எம்பிசியினருக்கு அளித்த இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க ஒத்துக் கொண்டனர். இதனைதொடர்ந்து கடந்த 26ம் தேதி நடைபெற்ற சட்டபேரவை கூட்டத்தொடரின் கடைசிநாளில், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்படும் 20 சதவீத இடஒதுக்கீட்டில், 6 மாதம் மட்டும் செல்லும் வகையில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடும், சீர்மரபினர் உள்ளிட்ட 93 சாதிகளுக்கு 7 சதவீத உள் ஒதுக்கீடும் எஞ்சியுள்ள மற்ற மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 2.5 சதவீத உள்ஒதுக்கீடும் வழங்கி எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அரசின் இந்த அறிவிப்பால், எம்.பி.சி பிரிவில் உள்ள மற்ற 93 பிரிவினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்காக மட்டுமே இந்த இடஒதுக்கீட்டை அவசர அவசரமாக நிறவேற்றியுள்ளார். இதை எதிர்த்து வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இதற்கு எதிராக பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பின் தலைவரான கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ரத்தினசபாபதி உள் இடஒதுக்கீட்டுக்கு எதிராக பேசியுள்ளார். அவர் கூறியதாவது: மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்பட்டு வந்த இடஒதுக்கீடு, மூன்றாக பிரிக்கப்பட்டு வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு பிற்படுத்தப்பட்டு(பி.சி) சமுதாயத்தின் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்படுகிறது. 1989ம் ஆண்டு புதியதாக எம்.பி.சி எனப்படும் புதுப்பிரிவு உருவாக்கப்பட்டது. இதன்முலம் அன்றிலிருந்தே 143 பிற்படுத்தப்பட்ட(பி.சி) சமுதாயத்தை சேர்ந்த மாணவர்கள், இளைஞர்கள் வேலை, கல்வி என அனைத்திலும் மெரிட்டில் தான் பெற முடிந்தது. இடஒதுக்கீட்டில் எதும் கிடைக்கவில்லை. பிற்படுத்தப்பட்டோருக்கு எந்த சலுகைகளும் வழங்கவில்லை. பேருக்கு தான் பிற்படுத்தப்பட்டோர் என்று சொல்கிறார்கள். ஆனால் வன்னியர்களோ கலைஞர், ஜெயலலிதா இருந்தபோது எந்த சத்தமும் இடாமல், தற்போது உள்ள அரசாங்கத்தை தங்களால் ஏதேனும் செய்யமுடியும் என்ற நம்பிக்கையில் இதை ஆரம்பித்தார்கள். அந்த நம்பிக்கை தற்போது நிறைவேறிவிட்டது.  

இடஒதுக்கீட்டிற்காக வன்னியர்கள் போராட்டம் நடத்தினர், உடனே முதல்வர் அழைத்து பேசினார். அன்றிரவே குலசேகரன் கமிட்டி அமைக்கப்பட்டது. அவர் வன்னியர் அமைப்பை சேர்ந்தவர். அவரை எப்படி இதில் நியமித்தார்கள் என்று தெரியவில்லை. வன்னியர் அமைப்புகள் ஏற்கனவே 32 வருடம் சலுகைகள் அனுபவித்து வந்துள்ளது. தற்போது மீண்டும் அவர்களுக்கு மேலும் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. சிலர் கேள்வி கேட்கிறார்கள். 20 சதவீதம் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு(எம்.பி.சி) வழங்கப்பட்டது தானே இதை ஏன் பிற்படுத்தப்பட்டோர் (பி.சி) நீங்கள் கேட்கிறீர்கள் என்கிறார்கள். இந்த 20 சதவீதமும் எங்களிடம் இருந்து எடுக்கப்பட்டது தான். ஒரே ஒரு சமூகத்தை திருப்திபடுத்த 4 கோடி மக்கள் உள்ள 137 சமூகங்கள் உள்ள பி.சி பிரிவினர் வயிற்றில் அரசு அடித்துள்ளது. நாங்கள் அரசியல் கட்சி தொடங்கி உங்களை அச்சுறுத்த போவதில்லை.

ஆனால் 137 சமூதாய பிற்படுத்தப்பட்ட மக்களும் எப்படியும் பதில் கொடுப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறோம். ஜாதி ஓட்டிற்காக யார் செத்தால் என்ன என்று, இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. ஏன் எம்.பி.சியிலேயே ஒன்றுமில்லாத பாவப்பட்டவர்களிடம் இருந்தும் பிடுங்கி கொடுக்கப்பட்டுள்ளது. அபத்தமான முதல்வர் நிச்சயமாக இந்த விவகாரம் தேர்தலில் பிரதிபலிக்கும். இவ்வாறு பேசினார், மேலும் கூட்டமைப்பை சேர்ந்தவர்களும் எதிர்ப்பு தெரிவித்து பேசினர். இந்த அமைப்பில் உள்ள 99 சதவீதம் பேர் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த கவுண்டர்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். மேல் மட்டத்தில் உள்ளவர்கள். இவர்களின் கருத்து தற்போது கீழ்மட்ட அளவில் வேகமாக பரவி வருகிறது. இதனால் கொங்கு அதிமுகவின் கோட்டை என்று கூறி வந்த நிலையில் தற்போது இந்த இட ஒதுக்கீடு விவகாரம் மூலம் பெரிய ஓட்டையே விழுந்து விட்டதாகவும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related Stories: