கூட்டணியில் சீட் முடிவாகாத நிலையில் ராசிபுரம் தொகுதியில் எல்.முருகன் போட்டியிடுவதாக சுவர் விளம்பரம்: அதிமுகவினர் கடும் அதிருப்தி

ராசிபுரம்: அதிமுக கூட்டணியில் பாஜவுக்கு ஒதுக்கப்படும் சீட் குறித்த பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் நிலையில் ராசிபுரம் தொகுதி வேட்பாளர் பாஜ மாநில தலைவர் என்று சுவர் விளம்பரம் செய்யப்பட்டிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடக்கிறது. இதில் அதிமுக கூட்டணியில் இடம் பெறும் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தை யில் முக்கிய நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர். பாமகவுக்கு 23 சீட் ஒதுக்கப்பட்ட நிலையில் பாஜ, தேமுதிக கட்சிகளுக்கான இடங்கள் குறித்த அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.

இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தொகுதியில் பல்வேறு இடங்களில் பாஜவினர், அந்த கட்சியின் மாநில தலைவர் எல்.முருகனை வேட்பாளர் என்று அறிவித்து சுவர் விளம்பரங்கள் செய்துள்ளனர். இது அதிமுகவினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அதிமுக நிர்வாகிகள் கூறுகையில், ‘‘எங்கள் கூட்டணியில் பாஜவுக்கு சீட் ஒதுக்குவதை விட, அவர்கள் கேட்கும் தொகுதிகள்தான் சிக்கலாக உள்ளது. குறிப்பாக கோவை மண்டலத்தில் அதிமுகவுக்கு சாதகமான, அதுவும் அமைச்சர்கள் சிட்டிங் எம்எல்ஏக்களாக உள்ள தொகுதிகளை கேட்கின்றனர்.

இந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில் குமாரபாளையம், ராசிபுரம் தொகுதிகளை குறிவைத்து அவர்கள் வலம் வருகின்றனர். இதில் ராசிபுரம் தொகுதியில் ஒருபடி மேலே போய், அவர்கள் கட்சியின் மாநிலத் தலைவர் முருகன் போட்டியிடுவதாக சுவர் விளம்பரம் செய் துள்ளனர். எத்தனை சீட்கள் என்பது கூட இன்னும் முடிவாகாத நிலையில், ேவட்பாளர் பெயரை எழுதி பாஜ விளம்பரம் செய்வது கூட்டணி தர்மத்திற்கு எதிரானது,’’ என்றனர்.

Related Stories: