தா.பேட்டையில் விரட்டி கடிக்கும் தெரு நாய்கள்: பீதியில் பொதுமக்கள்

தா.பேட்டை: தா.பேட்டை தெருக்களில் சுற்றித்திரிந்து விரட்டி கடிக்கும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை  எடுக்க வேண்டும் என பொதுமக்கள் செயல் அலுவலருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.தா.பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள தெருக்களில் தெரு நாய்கள் அதிக அளவு சுற்றித் திரிகிறது. இந்த நாய்கள் தெருவில் செல்வோரை  விரட்டி கடித்து விடுவது வாடிக்கையாக உள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் முதியவர்கள், குழந்தைகள் தினமும் அச்சத்துடனே கடந்து  செல்லும் அவலம் நிலவுகிறது. இதுபோல இரவு நேரங்களில் அவசரமாக டூவீலரில் செல்லும் வாகனஓட்டிகளை நாய்கள் கூட்டம் துரத்திக்கொண்டு  வருகிறது. இதனால் அவர்கள் வாகனத்தில் இருந்து கீழே விழுந்து காயமடைகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் பிள்ளாதுறை பகுதியை சேர்ந்த  மருதாம்பாள், பாப்பா, ராமாயி உள்ளிட்ட 5 பேரை தெரு நாய்கள் கடித்துள்ளது.

இதில் காயமடைந்த இவர்கள் தா.பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசியும், வெறிநாய் கடிக்கான ஊசியும் போட்டுக்கொண்டுள்ளனர்.  மேலும் தெரு நாய்கள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டு சாலையில் செல்வோர் மீதும், வாகனங்களின் குறுக்கேயும் வந்து விழுவதால் விபத்துகள்  ஏற்பட்டு பலர் காயம் அடைந்துள்ளனர். இதுதவிர காலை, மாலை வேளைகளில் நடை பயிற்சிக்கு செல்வோர் தெருக்களில் கூட்டமாக படுத்துக்  கிடக்கும் நாய்களைக் கண்டு மிகுந்த அச்சத்துடனே சென்று வருகின்றனர்.

எனவே தா.பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அதிக அளவு சுற்றித் திரியும் தெரு நாய்களை பாதுகாப்பான முறையில் பிடித்து அப்புறப்படுத்த  வேண்டும் என பேரூராட்சி செயல் அலுவலர் அசோகனிடம் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. தெரு நாய்கள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டு சாலையில் செல்வோர் மீதும், வாகனங்களின் குறுக்கேயும் வந்து விழுவதால் விபத்துகள் ஏற்பட்டு பலர்  காயம் அடைந்துள்ளனர்.

Related Stories: