சிவகங்கை அருகே வேங்கைப்புலி வேட்டை கல்வெட்டு கண்டெடுப்பு

சிவகங்கை: சிவகங்கை அருகே வேங்கைப்புலி வேட்டைக்கு நேர்த்திக்கடன் செய்த பழமையான ஜமீன்தார் கால கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது.சிவகங்கை தொல்நடைக் குழுவைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் காளிராசா, தலைமை ஆசிரியர் சுந்தரராஜன் ஆகியோர், புதிதாக  கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு குறித்து தெரிவித்ததாவது:

 படமாத்தூர் சித்தாலங்குடியில் கௌரி வல்லவர் மகாராஜா கோயில் உள்ளது. இதில் வணங்கப்படுகிற கடவுள் சிவகங்கையை ஆண்ட முதல் ஜமீன்  கௌரி வல்லப உடையண ராஜா (1801-1828) அல்லது அவரது மூதாதையராக இருக்கலாம். குதிரை மேல் அமர்ந்த வீரனை போன்ற அமைப்புடன்  அணிகலன்கள் அணிந்து தலைப்பாகையுடன் சிலை கம்பீரமாக காட்சியளிக்கிறது.

இதே சிலை அமைப்புடன் சிவகங்கையை அடுத்த முத்துப்பட்டியிலும் மகாராஜா கோயில் மக்களால் வணங்கப்பட்டு வருகிறது. படமாத்தூரில்  இருக்கும் கௌரி வல்லவரை சிவகங்கை அரண்மனையினர் குல சாமியாக வணங்குவதோடு அப்பகுதி மக்களும் தங்களது காவல் தெய்வமாக  வணங்குகின்றனர். கோயில் சுற்றுச்சுவரின் வடக்குப் பகுதியில் சுவரின் அடியில் ஒன்பது வரிகளைக் கொண்ட ஒரு கல்வெட்டு காணப்படுகிறது. 1861ம்  ஆண்டு துன்மதி வருடம் வைகாசி 26ம் நாள் மகாராஜா சத்ரபதி போதகுரு மகாராஜா பிரான்மலைக்கு வேங்கைப்புலி வேட்டைக்குச் சென்றார் அப்போது  படமாத்தூரில் இருக்கும் குல தெய்வமான வல்லவ சாமியிடம் செய்துகொண்ட பிரார்த்தனையின் படி புலியை சுட்டுக் குத்தியதாலே இந்த  திருமதிலைக் கட்டினது என அதில் எழுதப் பெற்றுள்ளது. இவ்வாறு தெரிவித்தனர்.

Related Stories: