ஒரு தொகுதியில் வெற்றி பெறுவதற்காக வன்னியர் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது: டிடிவி தினகரன் விமர்சனம்

சென்னை: அமமுக தலைமையில் கூட்டணி அமைக்க முயற்சி எடுத்துவருகிறோம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு திமுக, அதிமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் விருப்ப மனுக்களை வழங்கி வருகின்றன. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நாளை முதல் விருப்பமனு வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சென்னை தி.நகர் இல்லத்தில், சசிகலாவுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; அமமுக தலைமையில் கூட்டணி அமைக்க முயற்சி எடுத்துவருகிறோம். சட்டப்பேரவை தேர்தலில் அமமுக தலைமையில்தான் கூட்டணி அமையும். கூட்டணி குறித்து அமமுக நிர்வாகிகள் ஒவ்வொரு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அமமுக தலைமையை ஏற்றால் அதிமுகவுடன் கூட்டணியில் சேர்க்க தயார். அமமுக என்ன மாதிரியான முடிவு எடுக்கும் என்பது குறித்து ஓரிரு நாளில் தெரிவிக்கப்படும். இடஒதுக்கீடு என்பது தேர்தலுக்கான அறிவிப்பாக இருக்க கூடாது. இடஒதுக்கீடு தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்டு சுமூகமாக பேசி நிறைவேற்றியிருக்க வேண்டும்.

இடஒதுக்கீடு விவகாரத்தில் அனைத்து தரப்பு மக்களின் எண்ணங்களுக்கு ஏற்ப செயல்பட்டிருக்க வேண்டும். எல்லோருக்கும் மகிழ்ச்சி தருவதாகவும், ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும் இருக்க வேண்டும். ஒரு கண்ணில் வெண்ணையும், ஒரு கண்ணில் சுண்ணாம்பும் வைக்க கூடாது; தேர்தலுக்கான அறிவிப்பாக இருக்கக்கூடாது. ஒரு தொகுதியில் வெற்றி பெறுவதற்காக வன்னியர் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது என விமர்சனம் செய்தார். தவறு செய்தவர்களுக்கு இந்த தேர்தல் முடிவுகள் இடி விழுந்தது போல் இருக்கும் எனவும் விமர்சனம் செய்தார்.

Related Stories: