ஒரத்தநாட்டில் பெரியார் சிலை அவமதிப்பு: வைகோ கடும் கண்டனம்

சென்னை: ஒரத்தநாட்டில் பெரியார் சிலை அவமதிப்பு செய்யப்பட்டதற்கு வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பெரியார், அண்ணா ஆகிய தலைவர்களின் உருவ சிலைகள் மட்டுமல்ல, திருவள்ளுவர் சிலைகளும் கூட இந்த ஆட்சியில் அவமரியாதை செய்யப்படுவது என்பது வாடிக்கையாகிவிட்டது. தமிழர் தலைவர்களின் சிலைகள் கேவலப்படுத்தப்படும்போதெல்லாம் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரை குற்றவாளி கூண்டில் நிறுத்தி, அந்த அக்கிரம செயலை நீர்த்து போக செய்வது என்பதும் காவல்துறை அதிகாரிகளின் வாடிக்கையாகி விட்டது. பெரியார், மறைந்து அரை நூற்றாண்டு காலம் நெருங்குகிற இந்த வேளையிலும் அவருடைய உருவ சிலை குறி வைத்து தாக்கப்படுவதும், தொடர்புடைய குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து தண்டிக்கப்படாததும் இந்த ஆட்சியில் தொடர் கதையாக தொடர்ந்து வருகிறது. இந்த அக்கிரம செயலை கடுமையாக கண்டிக்கிறேன். குற்றவாளிகளை கைது செய்து, கூண்டில் ஏற்றி, தண்டிக்க வேண்டும் என்று அரசிடம் வற்புறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: