தமிழக சட்டமன்ற தேர்தல்: திமுக கூட்டணியில் இ.யூ.மு.லீ 3; மமக 2 தொகுதிகள் ஒதுக்கீடு: மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.!!!

சென்னை: தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தொகுதி பங்கீடு தொடர்பாக  திமுக, காங்கிரசுடன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் வியாழக்கிழமை முதல் கட்ட பேச்சுவார்த்தையை  தொடங்கியது. இன்று சென்னை அண்ணா அறிவாலாயத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதில், திமுக உடன் இரு கட்சிகளுக்கும் உடன்பாடு ஏற்பட்டது. தொடர்ந்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொகுதி பங்கீடு ஒப்பந்தம்  கையெழுத்தானது. தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகைதீன் கையெழுத்திட்டனர்.

தொடர்ந்து, திமுக கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில், திமுக  தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் மமக தலைவர் ஜவாஹிருல்லா கையெழுத்திட்டனர்.

தொகுதிகள் ஒதுக்கீட்டிற்கு பின்னர் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி தேசிய தலைவர் காதர் மொய்தீன் அளித்த பேட்டியில், ஐ.யூ.எம்.எல். குழுவினர் 6 பேர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினோம். சட்டப்பேரவை தேர்தலில் திமுக  கூட்டணியில் ஐயூஎம்எல் கட்சி 3 தொகுதிகளில் ஏணி சின்னத்தில் போட்டியிடும் என்றார்.

மமக தலைவர் ஜவாஹிருல்லா அளித்த பேட்டியில், திமுக கூட்டணியில் மனித நேய கட்சிக்கு 2 தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாஜகவின் சதியை முறியடிக்க திமுக அதிக தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். மனிதநேய மக்கள்  கட்சி எந்த சின்னத்தில் போட்டியிடும் என்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும் ஜவாஹிருல்லா தெரிவித்தார்.

திமுக கூட்டணியில் தற்போது வரை கூட்டணி கட்சிகளுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் தற்போது வரை கூட்டணி கட்சிகளுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  இதற்கிடையே, திமுக கூட்டணியில் உள்ள மதிமுக, விசிக உடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சு வார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது.

Related Stories:

>