தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் பீகார் அரசு: மாநிலத்தில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்....முதல்வர் நிதிஷ்குமார் அறிவிப்பு.!!!

பாட்னா: பீகார் மாநிலம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நாடு முழுவதும் கடந்த ஜனவரி 16ம் தேதி முதல் நடந்து வருகிறது. இதில், முதல் கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட 3  கோடி முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக, ஆக்ஸ்போர்டு பல்கலை.யின் கோவிஷீல்டு தடுப்பூசியும், இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவோக்சின் தடுப்பூசியும் பயன்படுத்தப்படுகிறது.

இதையடுத்து நாடு முழுவதும் முதியவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோயுள்ளவர்களுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. இருப்பினும், நாட்டில் உள்ள அரசு மருத்துவமைகளில் கொரோனா தடுப்பூசி இலவசமாக போட்டுக்கொள்ளவும், தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி ஒரு டோஸ் சேவை வரி ரூ.100 சேர்த்து ரூ.250 கட்டணத்தில் போட்டுக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தது.

இந்நிலையில், பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள அரசு சுகாதார நிலையத்தில் அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை போட்டுக்கொண்டார். தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேட்டியளித்த நிதிஷ்குமார், பீகார் மாநிலம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி இலவசம் போடப்படும் என அறிவித்தார்.

முன்னதாக, பீகார் சட்டமன்ற தேர்தலில் தங்கள் கூட்டணி வெற்றி பெற்றால், அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்குவோம் என்று பாரதிய ஜனதா கட்சி தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது. தொடர்ந்து, 243 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டமன்ற தேர்தலில், முதல்வரும், ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 125 இடங்களை கைப்பற்றியது. பாஜ 74 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களிலும் வெற்றி பெற்றன. தொடர்ந்து, 4வது முறையாக ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் நிதிஷ் குமார் பீகார் முதல்வராக பதவியேற்றார்.

இந்நிலையில், மீண்டும் பாஜக கூட்டணி வெற்றி பெற்றதால், பாஜகவின் தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தபடி, பீகாரில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்க அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனிடையே, மாநில முதல்வர் நிதிஷ் குமார் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

Related Stories: