10 வருஷமா போக்கு காட்டிய ஆளுங்கட்சி முட்டு கொடுத்த முட்டை உற்பத்தியாளர்கள்

முட்டைக்கு பேமசான ஊரு நாமக்கல். இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் இருக்கு. தினமும் 4 கோடி முட்டை உற்பத்தியாகுது. இந்த முட்டைகளை பாதுகாப்பாக சேமிச்சு வைக்க குளிர்பதன கிடங்கு வேண்டும் என்பது கோழிப்பண்ணையாளர்களின் நீண்ட நாள் கோரிக்கை. அதிலும் கடந்த 10ஆண்டுகளாக இந்த கோரிக்கை பலமாக இருந்தது. இரண்டு சட்டமன்றத் தேர்தல்களிலும் இதற்கான வாக்குறுதியை கொடுத்து, ஜெயித்தவுடன் காற்றில் பறக்கவிட்டது ஆளும் அதிமுக. இந்த தேர்தலிலும் இதையே வாக்குறுதியாக சொல்ல ஆரம்பிச்சிருக்கு. ஆனால், முட்டை உற்பத்தியாளர்கள், அதிமுகவின் மூக்கை உடைப்பது போல் ஒரு அதிரடி காட்டி இருக்கிறார்கள்.

பெரிய பண்ணையாளர்கள் தங்களது பண்ணைகளில் சொந்தமாகவே குளிர்பதன கிடங்கு அமைத்துவிட்டனர். அதிமுகவின் வாக்குறுதியை நம்பி இனியும் பலன் இல்லை என்ற முடிவுக்கு வந்த என்இசிசி, சப்தம் இல்லாமல், நாமக்கல் அருகே லத்துவாடியில் 10 ஏக்கர் நிலம் வாங்கி, ரூ.15 கோடியில் பிரம்மாண்ட குளிர்பதன கிடங்கை அமைத்துவிட்டனர். ஆளுங்கட்சி பிரமுகர்கள் யாரையும் அழைக்காமல் திறப்பு விழாவும் நடத்தி விருந்து போட்டு அசத்திவிட்டனர். 2.30 கோடி முட்டைகள் இங்கு சேமித்துவைக்க முடியும் என்கின்றனர். என்இசிசியின் அதிரடி குளிர்பதன கிடங்கால் ஆடிப்போயிருக்கிறது ஆளும்கட்சி.

* வீட்டில் பறக்குது கருப்புக்கொடி

மதுரை மாவட்டம், பெருங்காமநல்லூரில் உள்ள வீரமங்கை மாயக்காள் மகளிர் நலச்சங்கம் நிர்வாகி செல்வ பிரீத்தா. இவர் தன் வீட்டில் கருப்புக் கொடி கட்டி வைத்துள்ளார். இது குறித்து அவரிடம் கேட்டபோது, ‘‘தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி நடந்த சில சமூக அநீதிகளை எதிர்க்கும் விதமாக என் வீட்டில் கருப்புக்கொடி கட்டியுள்ளேன். மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தாமல், தங்கள் ஓட்டு அரசியலுக்காக தமிழக அரசு எம்பிசி இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு செய்து நிறைவேற்றிய சட்ட மசோதாவை கண்டிக்கிறேன். கடைசி வரை எவ்வளவோ போராடியும் கெஞ்சி கேட்டும் டிஎன்டி ஒற்றை சாதிச்சான்றிதழ் கொடுக்காததைக் கண்டிக்கிறேன். 58 கால்வாய் திட்டத்திற்கு நிரந்தர அரசாணை வெளியிடாததை கண்டிக்கிறேன். கல்வித்தந்தை மூக்கையாத்தேவர் சிலை திறப்பு விழா உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் அதிமுக அரசின் செயல்பாடுகளை கண்டித்து இந்த கருப்புக் கொடியை கட்டியுள்ளேன்’’ என்கிறார்.

Related Stories: