தனியரசுவை தனியே விட்ட அதிமுக

தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை என்ற அமைப்பை கடந்த 2001ம் ஆண்டு தொடங்கினார் தனியரசு. பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி போராட்டங்களை நடத்தி வந்தார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா தயவால், கடந்த 2011ம் ஆண்டு  சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் தனியரசு நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.  அன்று முதல் அ.தி.மு.க. கூட்டங்களில் கலந்து கொண்டு பேசி வந்தார். ஆனால், தொகுதியில் கவனம் செலுத்தாமல் இருந்ததால், மீண்டும் அங்கு போட்டியிட மறுத்தார். 2016ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து  திருப்பூர் மாவட்டம் காங்கயம் தொகுதியில் 2ம் முறையாக வென்றார். ஆனால், அரசு விழாக்களில் மட்டும் தலைகாட்டும் தனியரசு, மற்ற நேரங்களில் தொகுதிக்கு வருவதில்லை என பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.  ஜெயலலிதா மறைவிற்கு பின், ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். என இரண்டாக அணி பிரிந்தபோது தனியரசு இபிஎஸ் பக்கம் நின்றார். டிடிவி தினகரனிற்கு ஆதரவாகவும் செயல்பட்டு வந்தார். சில காலம், கருணாஸ், தமீம்அன்சாரியுடன் சேர்ந்து தனி  பிரிவாக செயல்பட்டு, அ.தி.மு.க.வுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்தார்.

 பின்னர், எடப்பாடி பழனிசாமி கை ஓங்கியவுடன், அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக குரல் எழுப்பி வந்தார். கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது அ.தி.மு.க. கூட்டணியில் இருந்த தனியரசு, பா.ஜ. போட்டியிடும் தொகுதியில் பிரசாரம் ஏதும்  செய்யபோவதில்லை என அறிவித்தார்.  இது அ.தி.மு.க. நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  கடந்த 2 தேர்தலின்போதும் சசிகலாவிடம் பேரம் பேசி, தனியரசு தொகுதியை மாற்றி போட்டியிட்டு வந்தார். இந்நிலையில் வரும் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் தனியரசுக்கு சீட் கிடைக்குமா? என கேள்வி எழுந்துள்ளது. அவரை அதிமுக  ஒதுக்கிவைத்துள்ளது. ஆனாலும் காங்கயம் தொகுதியில் மக்கள் மத்தியில் எதிர்ப்பு உள்ளதால், பல்லடம் தொகுதியை பெற காய் நகர்த்தி வருகிறாராம்.

Related Stories:

>