அதிமுக ஆட்சியில் 23 லட்சம் இளைஞர்கள் வேலையின்றி தவிப்பு: கனிமொழி எம்பி குற்றச்சாட்டு

திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மெயின் ரோட்டில் நேற்று இரவு திமுக தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக எம்பி கனிமொழி கலந்து கொண்டு பேசியதாவது: முதல்வர் பழனிசாமி மக்களை சந்தித்து பொய் பிரசாரம் செய்து வருகிறார். அவர் எப்படி முதல்வர் பதவிக்கு வந்தார் என்பது உங்களுக்கே தெரியும். திமுக தலைவர் அறிவிக்கும் திட்டத்தை இவர் செய்து வருகிறார். 4 வருடம் பதவியில் இருந்த அவர் மக்களுக்காக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழ்நாட்டை மத்தியில் ஆளும் பாஜவிடம் அடகு வைத்துள்ளார். மேலும், தமிழ் மொழியையும், மாநில உரிமைகளையும் பதவிக்காக அடகு வைத்தவர் தான் முதல்வர் பழனிசாமி. 4 ஆண்டுகளில் எந்த பணிகளும் மேற்கொள்ளவில்லை. தமிழ்நாட்டில் வேலைவாய்ப்புக்காக தொழிற்சாலைகள் அமைக்கப்படவில்லை. 23 லட்சம் படித்த இளைஞர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். இப்படி கடன் வாங்கி எந்த பணிகளையும் துரிதமாக மேற்கொள்ளவில்லை. வளர்ச்சி பணிகளும் நாட்டில் நடைபெறவில்லை. இந்த அதிமுக ஆட்சியில் சாலை போடுவதற்காக டெண்டர்கள் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் உள்ள அனைத்து சாலைகளும் குண்டும், குழியுமாக உள்ளது. குளோபல் டெண்டர் என்று நான்கு வருடமாக மக்களிடத்தில் வரி பணத்தை ஏமாற்றி வரும் அரசுதான் இந்த அரசு.

எந்த திட்டப் பணிகளையும் முதல்வர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் அறிவிக்கப்படுவது போல இந்த எடப்பாடி பழனிசாமி பல்வேறு திட்டங்களுக்கு சென்று அடிக்கல் நாட்டி மட்டும் வருகிறார். இவருக்கு அடிக்கல் நாயகன் என்றும் பட்டம் வழங்கலாம். ஏனென்றால் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை அடிக்கல் நாட்டப்பட்டு ஒரு செங்கல் கூட கட்டப்படவில்லை. இப்படி பல்வேறு திட்டங்களை மக்களை ஏமாற்ற அடிக்கல் நாட்டு விழா நடத்தி வருகிறார். அதேபோல் மாணவர்களுக்கு இலவச தொலைபேசி, இருசக்கர வாகனம் உள்ளிட்டவைகளை வழங்குவதாக தெரிவித்தார். ஆனால் ஒருவருக்கும் இதுவரை வழங்கப்படவில்லை. திமுக காலத்தில் பொதுமக்களுக்கு டிவி வழங்கினோம். அந்த டிவி இன்றும் வீடுகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. அதனை பொதுமக்கள் உபயோகித்துக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் வழங்கிய மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட பொருட்கள் எங்கு சென்றது என்று மக்களுக்கு தெரியும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: