தேசிய உணவு பாதுகாப்பு திட்டம் உளுந்து, பயறு பயிரிட விவசாயிகளுக்கு பயிற்சி

குளித்தலை : குளித்தலை அடுத்த நங்கவரம் வருவாய் கிராமத்திற்குட்பட்ட சூரியனூர் கிராமத்தில் உளுந்து, பாசிப்பயறு மற்றும் பயறு வகைகள் பயிரிட விவசாயிகளுக்கு பயிற்சி குளித்தலை வட்டார வேளாண் துறையின் சார்பில் நடத்தப்பட்டது. வேளாண் உதவி இயக்குனர் அரவிந்தன் தலைமை வகித்து பயிற்சியை துவக்கி வைத்தார்.

ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல் முன்னிலை வகித்தார்.வேளாண்துறை குளித்தலை வட்டார துணை வேளாண்மை அலுவலர் கணேசன் பேசுகையில், தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தில் விதைகள், உயிர் உரங்கள், நுண்ணூட்டச் சத்துக்கள்,தார்ப்பாய், ரோட்டவேட்டர், பாசன குழாய்கள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது என்றார்.மேலும், பயிர் காப்பீடு திட்டம், நுண்ணீர் பாசன திட்டம், கூட்டுப்பண்ணை திட்டம், மற்றும் இதர வேளாண் திட்டங்கள் பற்றியும் விளக்கம் அளித்தார்.

முகாமில் புழுதேரி வேளாண் அறிவியல் நிலைய தொழில்நுட்ப விஞ்ஞானி திருமுருகன், பயறு வகைகள் சாகுபடி, பராமரிப்பு குறித்தும் விளக்கம் அளித்து பேசினார். பெட்டவாய்த்தலை கரும்பு ஆலையின் கரும்பு அதிகாரி ஷோபனா மற்றும் வெங்கடேஷ் கரும்பு சாகுபடி செய்வது குறித்து பேசினர். குமாரமங்கலம் வேளாண் செம்மல் திருந்திய நெல் சாகுபடி முறைகள் குறித்து பேசினார். வேளாண் இடுபொருட்கள் சார்ந்த கண்காட்சி அமைக்கப்பட்டும் உயிர் உரங்கள் பயன்படுத்தும் முறைகள், டிஏபி தெரிவிக்க முறைகள் பற்றியும் செயல் விளக்கம் செய்து காட்டப்பட்டது.

இதில் சுற்றுவட்டாரத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் உழவர் ஆர்வலர் குழு உறுப்பினர்கள் உழவர் உற்பத்தியாளர் குழு உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள், சூரியனூர், குறிச்சி, நங்கவரம் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.பயிற்சியில் நாமக்கல் பிஜிபி வேளாண் பட்டப்படிப்பு மாணவர்கள் கிராமப்புற வேளாண்மை அனுபவ பயிற்சி மூலம் உளுந்து சாகுபடி குறித்த சூரியனூர் விவசாயிகளுடன் அனுபவங்களை பகிர்ந்து கொண்டு பயிற்சி பெற்றனர். பயிற்சி ஏற்பாடுகளை வேளாண் உதவி அலுவலர் தனபால் செய்திருந்தார்.

Related Stories: