பேராவூரணியில் நீதிமன்றம் அமைக்கப்படும் என அறிவிப்பு மட்டும்தானா?

*மக்களின் குரல்

பேராவூரணி : பேராவூரணியில் நீதிமன்றம் அமைப்பதாக அரசு அறிவித்தும் பணிகள் தொடங்கப்படாமல் இருப்பது, 40 ஆண்டுகால கோரிக்கை கனவாகி போய்விடுமோ என்ற எண்ணத்தை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது.பேராவூரணியில் நீீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்த நிலையில், 1996ம் ஆண்டு அப்போது எம்எல்ஏவாக இருந்த திருஞானசம்பந்தம் பேராவூரணிக்கு நீதிமன்றம் வருகிறது என தெரிவித்தார். அது தொடர்பாக பட்டுக்கோட்டையிலிருந்து நீதித்துறை சம்பந்தப்பட்ட குழு இடம் தேர்வு செய்வதற்காக பேராவூரணி வந்து, முன்னாள் எம்எல்ஏ., சிங்காரம் வீட்டில் மாடியுடன் கூடிய தனது வீட்டின் ஒரு பகுதியை நீதிமன்றத்திற்கு வாடகைக்கு தருவதாக ஒப்புக்கொண்டார். பொதுமக்கள் நீதிமன்றம் வரும் என்ற நம்பிக்கையுடன் இருந்தனர்.

இடையிடையே அதிகாரிகள் பேராவூரணி வந்து பார்வையிட்டு சென்றனர். 1996ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் நீதிமன்றம் வரும் என்ற அறிவிப்பும் ஆய்வுகளும் நடைபெற்றதே தவிர நீதிமன்றம் வரவேயில்லை.இந்நிலையில் கடந்த ஆண்டு சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் பேராவூரணியில் நீதிமன்றம் அமையும் என்று அறிவித்தார். இதையடுத்து தாலுகா அலுவலக வளாகத்தில் காலியாக உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தில் நீதிமன்றம் தற்காலிக கட்டிடத்தில் அமைய இருப்பதாக தற்போதைய எம்எல்ஏ கோவிந்தராசு கூறினார். கலெக்டர், நீதித்துறை அலுவலர்கள் வந்து கட்டிடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதனால் மக்களுக்கு முழு நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால் கட்டிட பராமரிப்பு, தளவாடப் பொருட்களுக்கான நிதி ஒதுக்கப்படாததால். பணிகள் நடைபெறவில்லை. பேராவூரணி தொகுதியில் பேராவூரணி, திருச்சிற்றம்பலம், வாட்டாத்திக்கோட்டை, சேதுபாவாசத்திரம் ஆகிய 4 காவல் நிலையங்கள் தற்போது உள்ளன.

சேதுபாவாசத்திரம் அதிக கிராமங்களை கொண்ட காவல் நிலையமாக இருப்பதால் அதை இரண்டாக பிரித்து பெருமகளூரில் ஒரு காவல் நிலையம் அமைத்து இந்த 5 காவல் நிலையங்களையும் உள்ளடக்கி பேராவூரணியில் ஒரு டிஎஸ்பி அலுவலகம் அமைத்து, நீதிமன்றமும் அமைக்கப்படும் என இடையிடையே தொகுதி மக்களுக்கு அரசியல் பிரமுகர்கள் நம்பிக்கை ஊட்டினர். ஆனால் எதுவும் நடைபெறவில்லை.

இந்நிலையில் தற்போதைய ஆட்சி காலம் முடிந்து தேர்தலும் வர இருக்கிறது. நீதிமன்றம் அதோ வருகிறது, இதோ வருகிறது என்று எதிர்பார்த்து காத்திருந்த பேராவூரணி தொகுதி மக்களுக்கு நீதிமன்றம் வருமா ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆளும் கட்சியினர் தேர்தல் அறிவிப்புக்கு முன் நீதுமன்றத்தை திறக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

Related Stories: