ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றும் பணி வழங்கவில்லை: சென்னை அண்ணா சாலையில் மாற்றுத்திறனாளி பட்டதாரிகள் சாலை மறியல்

சென்னை: பட்டதாரி ஆசிரியர் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய அரசு வேலை வழங்கவில்லை என்ற கோரிக்கையை முன்வைத்து மாற்றுத்திறனாளிகள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஒரு வாரமாக சென்னையில் இருக்கக்கூடிய மாற்றுத்திறனாளிகள் ஆணையம் அருகே மாற்றுத்திறனாளி அமைப்பை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக 2013ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வில் இவர்கள் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு போன்றவை நடந்து முடிந்த பிறகும் இவர்களுக்கு தற்போது வரை அரசு வேலை என்பது வழங்கப்படாமல் இருப்பதாகவும் அதேபோன்று பட்டதாரி மாற்றுத்திறனாளிகள் ஏராளமானோர் உரிய வேலைவாய்ப்பு கிடைக்காமல் வாழ்வாதாரத்திற்கே சிரமப்பட்டு வருவதாகவும் இவர்கள் தெரிவித்து வருகிறார்கள். இதுபோன்ற பிரச்சனைகளை முன்வைத்து தான் தற்போது சாலைமறியலில் மாற்றுத்திறனாளி அமைப்பை சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக சென்னை அண்ணா சாலையில் இந்த மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது.

அண்ணா சாலையில் இருந்து ஆளுநர் மாளிகை நோக்கி செல்லக்கூடிய பிரதான சாலை மற்றும் ஆளுநர் மளிகையிலிருந்து அண்ணா சாலை செல்லக்கூடிய சாலை என இரண்டு சாலைகளிலும் மறியல் போராட்டம் நடைபெறுகிறது. சாலையின் இருபுறமும் 100க்கும் மேற்பட்ட பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் சாலையில் அமர்ந்து தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் மாநில அரசுக்கு எதிரான கோஷங்களை தொடர்ந்து எழுப்பி வருகிறார்கள். உரிய வேலை வாய்ப்புகளை தங்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோஷங்களையும் அவர்கள் எழுப்பி வருகிறார்கள்.

திடீரென நடைபெற்று கொண்டிருக்கின்ற இந்த மறியல் போராட்டம் காரணமாக இந்த அண்ணா சாலையின் போக்குவரத்து முழுமையாக தடை பட்டிருக்கிறது. தங்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பது இவர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது. தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் காவல்துறையினர் இங்கிருந்து கலைந்து செல்லுமாறு வலியுறுத்தி வருகின்றனர். ஆனாலும் இவர்கள் தொடர்ந்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: