குரூப் 4 தேர்வு முறைகேட்டில் எடுத்த நடவடிக்கைகள் என்ன?: விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவு

மதுரை: மதுரையைச் சேர்ந்த வக்கீல் முகம்மது ரஷ்வி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘தமிழகத்தில் 2019ம் ஆண்டு நடந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை சுமார் 16 லட்சம் பேர் எழுதினர். தேர்வு முடிவுகள் வெளியானபோது, ராமேஸ்வரம் தேர்வு மையத்தில் தேர்வெழுதிய பலர் முதல் நூறு இடங்களை பெற்றது தெரிய வந்தது. இதில், பெருமளவு மோசடி நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த முறைகேடு குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரிக்கின்றனர்.

சிபிஐ விசாரித்தால்தான் உண்மைகளை வெளிக்கொண்டுவர முடியும். எனவே, குரூப் 4 தேர்வு முறைகேடு குறித்த  உண்மைகளை கண்டறியும் வகையில், இதுதொடர்பாக சிபிசிஐடி வசமுள்ள வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி ஆர்.ஹேமலதா ஆகியோர் விசாரித்தனர். வக்கீல் நீலமேகம் ஆஜராகி, ‘‘குரூப்-4 தேர்வு முறைகேட்டில் இதுவரை கடைநிலை ஊழியர்கள் மட்டுமே கைது ெசய்யப்பட்டுள்ளனர்.

வழக்கில் தொடர்புடைய உயர் அதிகாரிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. சிபிஐ விசாரித்தால்தான் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்படுவர்’’ என்றார். இதையடுத்து நீதிபதிகள், குரூப் 4 தேர்வு முறைகேட்டில் சிபிசிஐடி போலிசார் இதுவரை கைப்பற்றிய ஆவணங்கள், இதுவரை ேமற்கொள்ளப்பட்ட நடவடிக்கை உள்ளிட்ட விபரங்களை தமிழக தலைமை செயலர் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 4 வாரம் தள்ளி வைத்தனர்.

Related Stories: