கணவனால் கைவிடப்பட்ட ஆதரவற்ற பெண்ணின் 3 குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் ஒப்படைப்பு: சப்-கலெக்டர் முன்னிலையில் நெகிழ்ச்சி

பட்டுக்கோட்டை: தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை பாக்கியம் நகரை சேர்ந்த டிரைவர் வீராச்சாமியின் மனைவி உஷா (40). இவர்களுக்கு பாலா (9), அன்பு (5) என்ற 2 ஆண் குழந்தைகளும், தரணி (4) என்ற ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் வீராச்சாமி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் தன் மனைவி மற்றும் குழந்தைகளை விட்டுவிட்டு சென்றுவிட்டார். இதனால் உஷா தனது 3 குழந்தைகளையும் வைத்துக் கொண்டு அன்றாட கூலிவேலை செய்து அதில் வரும் சொற்பவருவாயை வைத்து பாக்கியம் நகரில் ஒரு குடிசை வீட்டில் வாடைகைக்கு வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் உஷாவிற்கு கடந்த ஒரு மாத காலமாகவே உடல் சோர்வு ஏற்பட்டதுடன், சளி, இருமல் அதிகமாகி, உடல் எடை குறைந்து மெலிந்த தோற்றத்தில் படுத்த படுக்கையாக உள்ளார். உடனே இதையறிந்த பட்டுக்கோட்டையை சேர்ந்த தன்னார்வ இளைஞர்கள் பக்ருதீன், ராஜபிரபு, விக்னேஷ், அஜீஸ் ஆகியோர் உஷாவை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதனால் 3 குழந்தைகளின் வாழ்க்கை கேள்விக்குறியாக இருந்தது. இந்நிலையில் மருத்துவமனையில் உள்ள உஷாவை பட்டுக்கோட்டை சப்-கலெக்டர் பாலச்சந்தர் பார்வையிட்டு, அவருக்கு மேல் சிகிச்சை அளிக்க டாக்டர்களிடம் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து சப்-கலெக்டர் பாலச்சந்தர் முன்னிலையில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மைய அலுவலர்கள் ஹெலன், சுகந்தவள்ளி ஆகியோரிடம் 3 குழந்தைகளும் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டனர். முன்னதாக தாயை விட்டு நாம் தற்காலிகமாக

பிரியப்போகிறோம் என்பதை உணர்ந்த 3 குழந்தைகளும் அம்மாவிற்கு முத்தம் கொடுத்தனர். அம்மாவும் தனது குழந்தைகளுக்கு முத்தம் கொடுத்தார். மேலும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள உஷாவுக்கு மேல் சிகிச்சை அளிப்பதற்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்புவதாகவும் உறுதியளிக்கப்பட்டது.

குழந்தைகளும், தாயும் தற்காலிகமாக பிரிந்திருந்தாலும், இப்பிரிவு தெரியக் கூடாது, அவர்களுக்குள் தொடர்பு இருக்க வேண்டும் என்று பட்டுக்கோட்டை தாசில்தார் தரணிகா தனது சொந்த செலவில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட உஷாவிற்கு செல்போனும், 3 குழந்தைகளுக்கு புதிய ஆடைகளும் வழங்கியது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

Related Stories: