வனவிலங்குகளை கண்காணிக்க ஆய்வு மையம் அமைக்க வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

மதுரை: வனவிலங்குகளை கண்காணிக்க ஆய்வு மையம் அமைக்கக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை, புதுமாகாளிபட்டி ரோட்டைச் சேர்ந்த மணிபாரதி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘சுற்றுச்சூழல் மாறுபாட்டால் வனவிலங்குகள் காட்டை விட்டு வெளியேறி விவசாய நிலங்களை அழிக்கும் சூழல் உருவாகியுள்ளது. காட்டை விட்டு வெளியே வருவதை கண்காணிக்க மாவட்டந்தோறும் ஆய்வு மையம் அமைக்கவும், பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்க பொதுவான தொலைபேசி எண் வழங்கவும், வனவிலங்குகளுக்கு முதலுதவி செய்ய நடமாடும் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தவும், கடல் வாழ் விலங்குகளை பாதுகாக்க மையம் அமைக்கவும் உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி ஆர்.ஹேமலதா ஆகியோர், மனுவிற்கு மத்திய, மாநில அரசுகளின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர்கள் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 8 வாரம் தள்ளி வைத்தனர்.

Related Stories: