யுபிஎஸ்சி தேர்வர்களுக்கு கூடுதல் வாய்ப்பு கிடையாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி: ‘யுபிஎஸ்சி தேர்வர்களுக்கு கண்டிப்பாக கூடுதல் வாய்ப்பு வழங்க முடியாது’ என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து மனுக்களை தள்ளுபடி செய்தது. நாடு முழுவதும் கடந்த ஆண்டு மே 31ம் தேதி நடைபெறுவதாக இருந்த சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வு கொரோனோ பரவல் காரணமாக பலமுறை ஒத்திவைக்கப்பட்டு, இறுதியாக சமீபத்தில் நடத்தி முடிக்கப்பட்டது.  இந்த நிலையில் பல்வேறு மாநிலத்தை சேர்ந்தவர் தரப்பில் கடந்த இரு மாதங்களுக்கு முன்னதாக உச்ச நீதிமன்றத்தில் ஒரு புதிய கோரிக்கை கொண்ட மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “கொரோனா பிரச்னை காரணத்தினால் நாடு முழுவதும் பலர் யுபிஎஸ்சி தேர்வுக்கு சரியாக தயாராக முடியவில்லை. எனவே வயது வரம்பு அடிப்படையில் கடந்த அக்டோபருடன் தேர்வெழுத கடைசி வாய்ப்புள்ளவர்கள் உட்பட அனைவருக்கும் தேர்வு எழுத கூடுதல் வாய்ப்பு வழங்கி அதற்கான புதிய தேதியை அறிவிக்க யுபிஎஸ்சி நிர்வாகத்திற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’’ என குறிப்பிடப்பட்டது.

 

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தது. இந்த நிலையில் நீதிபதிகள் இந்து மல்கோத்ரா மற்றும் அஜய் ரஸ்தோகி ஆகியோர் கொண்ட அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில்,“யுபிஎஸ்சி தேர்வு கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு தான் முறைப்படி திட்டமிட்டு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த விவகாரத்தில் தேர்வர்களுக்கு கண்டிப்பாக மறுவாய்ப்பு அல்லது கூடுதல் சலுகையோ கண்டிப்பாக வழங்க முடியாது’’ என தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், அதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்டு இருந்த அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்தனர்.

Related Stories: