ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாள்: அம்மாவின் வழியில் மக்களை காப்பேன்; சென்னை இல்லத்தில் விளக்கேற்றி முதல்வர் பழனிசாமி உறுதிமொழி ஏற்பு.!!!

சென்னை: ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுகவினர் தங்கள் இல்லத்தில் தீபம் ஏற்றி உறுதிமொழி ஏற்றனர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாள் இன்று தமிழகம் முழுவதும் அதிமுகவினர் சார்பில் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது. பல்வேறு இடங்களில் அன்னதானம், நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.

 இதற்கிடையே, ஜெயலலிதாவின் 73வது பிறந்த நாளை விமரிசையாக கொண்டாட வேண்டும், மாலையில் வீடுகளில் விளக்கு ஏற்றி, அதிமுகவை காப்போம் என உறுதியேற்போம் என அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வமும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி கூட்டாக அறிக்கை வெளியிட்டனர்.

அதன்படி, ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி குடும்பத்துடன் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் விளக்கேற்றி உறுதிமொழி ஏற்றார். உயிர் மூச்சுள்ளவரை அம்மாவின் வழியில் மக்களையும், மக்களுக்கான அதிமுக இயக்கத்தையும் காப்பேன்; இது அம்மா மீது ஆணை என்று உறுதிமொழி ஏற்றார்.

 இதனைபோன்று, தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி, மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி உள்ளிட்ட அமைச்சர்களும் , அதிமுக எம்எல்ஏக்களும் தங்கள் இல்லங்களில் தீபம் ஏற்றி உறுதிமொழி ஏற்றனர். தமிழகம் முழுவதும் அதிமுகவினர் தங்கள் வீடுகளில் தீபம் ஏற்றி உறுதிமொழி ஏற்றனர். 

Related Stories: