மைதானம் இல்லையா.. கவலை வேண்டாம்.. குழந்தைகளுக்கு ஜாக்பாட் லாரியிலே விளையாடலாம்: கிழக்கு டெல்லி மாநகராட்சி புதிய திட்டம்

புதுடெல்லி; மைதானம் இல்லாத இடங்களில் குழந்தைகள் விளையாட வசதியாக பழைய லாரிகளை கொண்டு வந்து நிறுத்தி மொபைல் பூங்காவாக மாற்றி குழந்தைகள்விளையாட வழிவகை செய்யப்படும் என்று கிழக்கு டெல்லி மாநகராட்சி தெரிவித்துள்ளது. டெல்லி சுற்றுலா பூங்கா திருவிழா தற்போது நடந்து வருகிறது. இதில் மொபைல் பூங்கா அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது. பழைய லாரியில் மறுசுழற்சி பொருட்களை பயன்படுத்தி குழந்தைகள் விளையாடும் வகையில் இந்த பூங்கா வடிவமைக்கப்பட்டு இருந்தது. தற்போது கிழக்கு டெல்லி மாநகராட்சியும், மைதானம் இல்லாத பகுதிகளில் குழந்தைகள் விளையாட வசதியாக இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி குழந்தைகள் பயன்படுத்தக்கூடிய, விளையாடக்கூடிய கட்டமைப்புகள் இந்த லாரியில் உருவாக்கப்பட்டு, மைதானம் இல்லாத பகுதியில் நிறுத்தப்படும். அதில் குழந்தைகள் விளையாடி மகிழலாம் என்று கிழக்கு டெல்லி மாநகராட்சி அறிவித்துள்ளது.

கிழக்கு டெல்லி மாநகராட்சியில் உள்ள தோட்டக்கலைத்துறை சார்பில் இதற்கான திட்டங்கள் மற்றும் வடிமைப்புகள் ஆறுநாட்களில் உருவாக்கப்படும். இதன்படி லாரியின் மேற்பகுதியில் விளையாடும் பகுதி அமைக்கப்படும். அதுவும் குழந்தைகள் விளையாட பயன்படுத்தும் உபகரணங்களை கொண்டு அந்த பகுதி உருவாக்கப்படும். அதில் போதுமான பாதுகாப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படும். சறுக்கி விளையாடும் வசதியும் அமைக்கப்படும். இந்த பூங்காவில் நீர் தடுப்பு வசதியும், மழைநீர் உள்புகாத வண்ணம் மேற்கூரையும் அமைக்கப்படும். அனைத்து இடங்களிலும் கட்டிடங்கள் எழுந்துவிட்ட நிலையில் குழந்தைகள் விளையாட வசதியாக இந்த மொபைல் பூங்கா உருவாக்கப்படுகிறது என்று கிழக்குடெல்லி மாநகராட்சி அறிவித்துள்ளது.

Related Stories: