`காச மட்டுமே நோக்கி வனத்துறை போகுது’ அந்தியூர் வனக்காப்பாளர் விஷம் குடித்து தற்கொலை: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

அந்தியூர்: அந்தியூரில் இரண்டு மாத விடுப்பில் இருந்த வனக்காப்பாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்தவர் அன்பன். இவர், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனத்துறையில் வாட்சராக பணியாற்றும் போது 2015ல் இறந்தார். இதையடுத்து, வாரிசு அடிப்படையில் எம்.பி.ஏ. பட்டதாரியான அவரது மகன் பிரபாகரனுக்கு 2016ல் வனக்காப்பாளர் பணி கிடைத்தது. அவர், ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனச்சரகம் கொம்புத்தூக்கி மாரியம்மன் வனப்பகுதியில் வனக்காப்பாளராக நியமிக்கப்பட்டு 2 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார்.

பின்னர் கடந்த 2 ஆண்டுகளாக சென்னம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட கொமராயனூர் தண்டா பகுதி வனக்காப்பாளராக பணியாற்றி வந்தார். தாய் ராஜம்மாளுடன் அந்தியூர் அருகே காட்டூர் பகுதியில் வசித்து வந்தார். மதுப்பழக்கத்திற்கு அடிமையான பிரபாகரனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த 2 மாதமாக பணிக்கு செல்லாமல் விடுப்பில் இருந்துள்ளார். இந்நிலையில், ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே கொம்புத்தூக்கி அம்மன் கோவில் வனப்பகுதியில் வனத்துறையினர் நேற்று முன்தினம் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த போது, அப்பகுதியில் பிரபாகரன் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

தகவலின் பேரில், பர்கூர் போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், அவர் விஷம் குடித்து தற்கொலை செய்தது தெரியவந்தது. முன்னதாக பிரபாகரன் செல்போனில் பதிவு செய்த வீடியோவை அவரது சகோதரி ஜெயப்பிரபா, நண்பர்களுக்கு அனுப்பி உள்ளார். அதில் பிரபாகரன், வனத்துறையில் போராடி ஜெயிக்க முடியாது. 14-15 ஆண்டுகள் காத்திருந்து தான் பதவி உயர்வு பெற முடியும். இது நான் சொல்லும் மன அறிக்கை, வனக்காப்பாளர்களின் மனநிலையை யாரும் புரிந்து கொள்வதில்லை.

நேர்மையாக வேலை செய்தால் யாரும் மதிப்பதில்லை. இங்கு காசுதான், ஒண்ணும் பண்ண முடியாது, ஜால்ரா போட்டால் தப்பிக்கலாம், காச மட்டுமே நோக்கி வனத்துறை போகுது. எம்.பி.ஏ. படிச்சுட்டு சாதிக்கணும்னு வந்து ஒண்ணும் பண்ண முடியல. அலுவலர்கள் யாரும் மதிப்பதில்லை. கேவலமாக பாக்குறாங்க, சில வனக்காப்பாளர்கள் மற்றும் வனச்சரக அலுவலர்கள் ஒரே இடத்தில் 9 முதல் 10 ஆண்டு வரை பணியாற்றுகிறார்கள். ஆனால், புதிதாக பணியில் சேர்ந்தவர்களை அடிக்கடி பணியிட மாற்றம் செய்கிறார்கள். வனத்துறை காசுக்கு அடிக்ட். நான் மதுவுக்கு அடிக்ட், என்னை யாரும் காப்பாற்ற முடியாது. ஏற்கெனவே, தற்கொலைக்கு முயன்று ஒருவர் காப்பாற்றி விட்டார். தற்போது நான் இருக்கும் இடத்தை கண்டறிய முடியாது. நீங்கள் வரும் போது பிணமாக இருப்பேன் என கூறியபடி தற்கொலை செய்துள்ளார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Related Stories: