விலை உயர்வை கண்டித்து கறிவேப்பிலையுடன் செல்பி எடுத்து மாதர் சங்கம் நூதன போராட்டம்

கோவை: கறிவேப்பிலை விலை உயர்வை கண்டித்து கோவையில் கறிவேப்பிலையுடன் செல்பி எடுத்து மாதர் சங்கத்தினர் நூதன போராட்டம் நடத்தினர்.பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது. சமையல் எரிவாயு விலையும் உயர்ந்துள்ளது. தவிர, காய்கறிகளின் விலை ஏறு முகத்தில் இருக்கிறது. இந்நிலையில், காய்கறி வாங்கினால் இலவசமாக கடைகளில் தரப்படும் கறிவேப்பிலை தற்போது கிலோ ரூ.150 வரை விற்பனை செய்யப்படுகிறது. கறிவேப்பிலை விலை வரலாறு காணாத உயர்வை எட்டியுள்ளதால், கடைகளில் இலவசமாக கறிவேப்பிலை அளிப்பது நிறுத்தப்பட்டுள்ளது. இந்த கடும் விலை உயர்வால் இல்லதரசிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, கறிவேப்பிலை விலை உயர்வை கண்டித்து கோவையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ‘கறிவேப்பிலையுடன் ஒரு செல்பி’ என்ற நூதன போராட்டத்தில் காட்டூர் பகுதியில் ஈடுபட்டனர். அப்போது, பெண்கள், சிறுவர்கள் தலையில் கறிவேப்பிலை கிரீடம், சின்ன வெங்காயம் மாலை அணிந்து கொண்டு செல்பி எடுத்தும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தில், மாதர் சங்க மாவட்ட செயலாளர் ராதிகா, பொருளாளர் ஜோதிமணி, மாநிலக்குழு உறுப்பினர்கள் ராஜலட்சுமி, சுதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories: