கொள்முதல் செய்யாததால் வீணாகி வரும் நெல் மூட்டைகள்: அதிகாரிகள் வேடிக்கை

மானாமதுரை: மானாமதுரை அருகே சின்னக்கண்ணனூரில் கிராமத்தில் 2 நாட்களாக நெல் கொள்முதல் நடைபெறவில்லை. இரண்டாவது மையம் அமைக்கப்படவேண்டி கொடுத்த மனுவிற்கும் நடவடிக்கை எடுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் நெல் மூட்டைகள் சேதமடைந்து வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மானாமதுரை அருகே உள்ள சின்னக்கண்ணணூர் கிராமத்தில் நெல் கொள்முதல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்திற்கு சோமாத்தூர், மானங்காத்தான், புலிக்குளம் உள்ளிட்ட கிராம விவசாயிகள் நெல் கொள்முதல் மையத்தில் நாலாயிரத்துக்கு மேற்பட்ட நெல் மூட்டைகள் அரசு கொள்முதலுக்காக வைத்துள்ளனர்.

கடந்த ஜனவரி மாத மூன்றாவது வாரத்தில் குவிக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளை முழுமையாக இதுவரை கொள்முதல் செய்யாமல் கிடப்பில் போடப்பட்டள்ளதால் விவசாயிகள் நெல்மூட்டைகளுக்கு காவலாக இரவு பகலாக காத்து கிடக்கின்றனர்.

பகலில் சுட்டெரிக்கும் வெயில், இரவில் கடும் பனிப்பொழிவு காரணமாக நெல் மூட்டைகள் வீணாகி வருகின்றன. விவசாயிகள் கடந்த நான்கு ஆண்டுகளாக கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த ஆண்டு நன்றாக விளைந்த நெல்லை கொள்முதல் செய்யாமல் காலம்தாழ்த்துவதால் கடன் வாங்கி விவசாயம் செய்த விவசாயிகள் அரசிடம் விற்கமுடியாமல் தனியார்களுக்கு குறைந்த விலையில் விற்கும் நிலை எழுந்துள்ளது.

சின்னக்கண்ணணூர் விவசாயிகள் கூறுகையில்,‘‘ நெல் தூற்றுவது, மூட்டைகளை தரம்பிரிப்பது உள்ளிட்ட வேலைகளை செய்ய ஆட்கள் இருந்தும் ஒரு மையம் மட்டுமே இயங்கி வந்தது.தற்போது அந்த ஒரு மையமும் இரண்டு நாட்களாக செயல்படவில்லை. இது குறித்து கலெக்டர் நுகர்பொருள்வாணிப கழக மண்டல மேலாளர், தாசில்தார் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுக்கு தெரிவித்தும் காத்திருக்கும் விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்முதல் செய்வதில் அலட்சியம் காட்டி வருகின்றனர் எனவே மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

Related Stories: