டொரண்டோ பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு அரசு நிதி வழங்க வேண்டும்: கமல்ஹாசன் கோரிக்கை

சென்னை: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்று வெளியிட்ட அறிக்கை: ஹார்வர்டின் ஒரு தொடர்ச்சியாக கனடா நாட்டில் உள்ள டோரன்டோ பல்கலைக்கழகத்திலும் தமிழ் இருக்கை அமைக்கும் முயற்சி இரண்டு வருடங்களுக்கு முன்னரே ஆரம்பமாகி முன்னேற்றம் கண்டிருக்கிறது. இதற்கு தேவையான வைப்பு நிதி 3 மில்லியன் டாலர்கள். அங்கேயுள்ள தமிழ் மக்கள் ஏற்கனவே 2.44 மில்லியன் டாலர்கள் திரட்டிவிட்டார்கள். இன்னும் தேவை 5,60,000 டாலர்கள் மட்டுமே. அதாவது இந்திய மதிப்பில் 3.2 கோடி ரூபாய் மட்டுமே.

அரசு இந்த பெருமுயற்சிக்கு தேவைப்படும் மீதி நிதியை வழங்க வேண்டும். 193 வருடங்கள் பாரம்பரியம் மிக்க டோரன்டோ பல்கலைக்கழகத்தில் அமையும் தமிழ் இருக்கை, தமிழுக்கான ஆராய்ச்சிகளை உயரிய முறையில் நடத்தி தமிழின்  தொன்மையையும், பெருமையையும் நிலைநாட்டுவதோடு, உலகின் பல்வேறு தமிழ் ஆய்வுகளை சுதந்திரமாக முன்னெடுக்கும் மையப் புள்ளியாகவும் செயல்படும் என்பதில் ஐயமில்லை. இதற்கு கிடைக்கும் வெற்றி தமிழக அரசுக்கும் தமிழ் மக்களுக்கும் கிடைக்கும் வெற்றி. இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.

Related Stories: