5 மாநில தேர்தல் பாதுகாப்பில் 225 கம்பெனி துணை ராணுவம்: மேற்கு வங்கத்துக்கு வீரர்கள் வந்தனர்

கொல்கத்தா: தமிழகம், மேற்கு வங்கம் உட்பட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் பாதுகாப்பில் மொத்தம் 225 கம்பெனி துணை ராணுவம் பயன்படுத்தப்பட உள்ளது. தமிழ்நாடு, மேற்கு வங்கம், அசாம், கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. தேர்தல் பாதுகாப்பு பணியில் மத்திய பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்படுவது வழக்கம். இதன்படி, மேற்கு வங்கத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக முதல் கட்டமாக 12 கம்பெனி மத்திய ஆயுதப்படை போலீஸ் படையினர் நேற்று வந்தடைந்தனர். ஒவ்வொரு கம்பெனியிலும் சுமார் 100 வீரர்கள் இருப்பார்கள்.

இவர்கள் ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வீரர்கள் ஆவர். மேற்கு வங்கத்தில் மொத்தம் 125 கம்பெனி மத்திய படையினரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதில் சிஆர்பிஎப் படையினர் 60 கம்பெனிகளாவும், எஸ்எஸ்பி படையினர் 30 கம்பெனிகளாகவும், சிஐஎஸ்எப், இந்தோ-திபெத் படையினர் தலா 5 கம்பெனிகளாகவும் இடம் பெற்றிருப்பர். இவர்கள் அனைவரும் அடுத்த சில நாட்களில் மேற்கு வங்கத்திற்கு வருவார்கள் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பதட்டமான பகுதிகளான புருலியா, ஜார்கிராம் மாவட்டங்களில் அதிகபட்சமாக 9 கம்பெனி சிஆர்பிஎப் படைகளை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த தேர்தல் ஆணையம் தீர்மானித்துள்ளது. மேலும், தேர்தல் நடக்கும் 5 மாநிலங்களிலும் மொத்தம் 225 கம்பெனி துணை ராணுவ வீரர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related Stories: