வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் அதிமுகவுக்கா?: குமரி பாஜவில் புதிய புகைச்சல்

1996க்கு பின்னர் குமரி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலில் பாஜ வென்றது இல்லை. ஆனால் ஒவ்வொரு சட்டமன்ற தேர்தலிலும் சீட் பெறுவதிலும், போட்டியிடுவதிலும் ஆர்வம் காட்டினாலும்  ஒரு கட்டத்திற்கு மேல் வாக்குகளை பெற முடியாத நிலை உள்ளது. பாஜவால் குமரியில் சட்டமன்ற தேர்தலில் கால் ஊன்ற முடியாத நிலை தொடர்கிறது. சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறாமல் போவதற்கு கட்சி தலைவர்கள் சிலரது நடவடிக்கைகள் காரணம் என்று கட்சி தொண்டர்கள் பகிரங்கமாக குற்றம்சாட்ட தொடங்கியுள்ளனர். வரும் சட்டமன்ற தேர்தலையொட்டி அதிமுக, பாஜ தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படாத நிலையில் நாகர்கோவில், குளச்சல் தொகுதிகள் அதிமுகவிற்கு ஒதுக்கப்படுவதாக கூறி பாஜ கட்சியினர் அதிருப்தியடைந்துள்ளனர். சுய நல தலைவர்களால் பாஜ வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ள குமரியின் நாகர்கோவில், குளச்சல் சட்டமன்ற தொகுதிகள் அதிமுகவிற்கு ஒதுக்குகிறார்கள் என்றும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

2016 தேர்தலில்  இந்த இரண்டு தொகுதிகளிலும் அதிமுக  மூன்றாம் இடம் தான் பிடிக்க முடிந்தது. குமரி மாவட்ட பாஜ தொண்டர்கள் ஒரு பாஜ எம்எல்ஏவாவது சட்டசபைக்கு செல்ல மாட்டாரா? என்ற ஏக்கத்தில் உள்ளனர். கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் நாகர்கோவில்  மற்றும் குளச்சல் சட்டமன்ற தொகுதிகளில்  அதிமுகவைவிட பாஜ அதிக வாக்குகளை பெற்றதை சுட்டிக்காட்டுகின்றனர். இதனை பாஜ மாநில, தேசிய தலைவர்களுக்கு கோரிக்கையாகவும் வைத்து வருகின்றனர். இது குமரி மாவட்ட பாஜவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த புகைச்சல் தேர்தல் வேளையில் ஒருவருக்கொருவர் குழிபறிக்கும் வேலை வரை சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கின்றனர் கட்சியினர்.

Related Stories: