தர்மபுரி அருகே பரபரப்பு மயானத்திற்கு பாதை கேட்டு அமைச்சர் காரை முற்றுகை

கடத்தூர் : தர்மபுரி அருகே, மயானத்திற்கு பாதை வசதி கேட்டு, அமைச்சர் காரை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தர்மபுரி மாவட்டம், கடத்தூர் அருகே மனியம்பாடி, தாளநத்தம் உள்ளிட்ட பகுதிகளில், மினி கிளினிக்குகளை உயர்கல்வி மற்றும் வேளாண் துறை அமைச்சர் அன்பழகன் நேற்று திறந்து வைத்தார்.

பின்னர், கடத்தூர் வழியாக சில்லாரஅள்ளியில் மினி கிளினிக் திறப்பு விழாவிற்காக சென்று கொண்டிருந்தார். அப்போது கல்லாற்று பாலத்தில் 100நாள் வேலை செய்து கொண்டிருந்த 80க்கும் மேற்பட்டோர், திடீரென அமைச்சரின் காரை வழி மறித்து முற்றுகையிட்டனர். இதையடுத்து காரில் இருந்து இறங்கி வந்த அமைச்சர் அன்பழகனிடம், வெங்கடதாரஅள்ளி புதூர்-வெங்கடதாரஅள்ளி வெ.புதூர் உள்ளிட்ட பகுதியில் இறப்பவர்களை அடக்கம் செய்வதற்கு மயானத்திற்கு செல்ல வழிப்பாதை இல்லை. இதனால் பட்டா நிலத்தில் சடலத்தை எடுத்து சென்று அடக்கம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. எனவே, கல்லாற்று ஓடையை ஒட்டியபடி மயானத்திற்கு செல்வதற்கு வழி ஏற்படுத்த ேவண்டும் என கூறினர்.

 அப்போது அமைச்சர் அன்பழகன், ஆர்டிஓவை அழைத்து விசாரித்தார். பின்னர் நீர்வழிப்பாதையை ஆக்கிரமிக்காதபடி இருந்தால், வழிப்பாதை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும், விழாவிற்கு செல்லும் போது இதுபோல் காரை மறிக்க கூடாது. முறையாக மனு கொடுத்திருந்தால் நடவடிக்கை எடுத்திருப்ேபன் என தெரிவித்தார். இதையடுத்து அமைச்சர் அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: