மு.க.ஸ்டாலின் பிறந்தநாளில் மக்களுக்கு பல்வேறு மருத்துவ உதவிகளை செய்ய வேண்டும்: காஞ்சி வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

காஞ்சிபுரம்: மக்கள் பயன்பெறும் வகையில் மருத்துவ முகாம் - ரத்ததான முகாம் - கண் சிகிச்சை முகாம் உள்பட பல்வேறு மருத்துவ உதவிகளை செய்ய வேண்டும் என காஞ்சி வடக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காஞ்சி வடக்கு மாவட்ட திமுக அவசரா செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் குன்றத்தூர் செங்குந்தர் திருமண மண்டபத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரங்கில் திருக்கழுக்குன்றம் வடக்கு ஒன்றியச் செயலாளர் வீ.தமிழ்மணி தலைமையில் நடந்தது. மாவட்டச் செயலாளர் தா.மோ.அன்பரசன் எம்எல்ஏ வரவேற்றார். மாவட்ட துணைச் செயலாளர்கள் விசுவநாதன், அன்புச்செழியன், கலைவாணி காமராஜ், மாவட்ட பொருளாளர்கள் சேகர், இப்ராகிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் தா.மோ.அன்பரசன் எம்எல்ஏ பேசியதாவது: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடும் விதமாக மார்ச் 1ம் தேதி காஞ்சி வடக்கு மாவட்டம் முழுவதும் உள்ள ஒன்றிய - நகர - பேரூர்களில் உள்ள அனைத்து ஊராட்சி - வார்டு கிளைகளில் திமுக கொடியேற்றி கொண்டாட வேண்டும். மாவட்டத்தில் 40க்கும் மேற்பட்ட ஆதரவற்றோர் இல்லங்களில் உள்ள ஆதரவற்றோர்களுக்கு மார்ச் 1ம் தேதி மதிய உணவு - உடைகளை வழங்க வேண்டும்.

ஏழை - எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மருத்துவ முகாம் - ரத்ததான முகாம் - கண் சிகிச்சை முகாம் உள்பட பல்வேறு மருத்துவ உதவிகளை செய்ய வேண்டும். இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் கிரிக்கெட், இறகு பந்து, கால் பந்து, கைப்பந்து, கபடி உள்பட விளையாட்டுப் போட்டிகளை நடத்தி பரிசுகளை வழங்க வேண்டும். உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்ச்சிக்காக வரும் 26ம் தேதி கரசங்கால் துண்டல்கழனியில் நடைபெறும் நிகழ்ச்சி மூலம் காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் அடங்கிய ஆலந்தூர்,  பெரும்புதூர், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளின் உள்ள மக்கள் குறைகளை கேட்டறிய  வருகை தர உள்ளார்.

இதில்,  காஞ்சி வடக்கு மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளில் இருந்து பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். வரும் சட்டமன்ற தேர்தலில் காஞ்சி வடக்கு மாவட்டத்தில் கட்சி அறிவிக்கும் வேட்பாளர்களை அமோக வெற்றி பெற செய்ய வேண்டும்.  மார்ச் 14ம் தேதி திருச்சியில் நடைபெற உள்ள திமுக மாநாட்டுக்கு மாவட்டத்தில் இருந்து திமுகவினர் 15 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பங்கேற்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கூறினார். கூட்டத்தில், எம்எல்ஏக்கள் எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, வரலட்சுமி மதுசூதனன், இதயவர்மன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: