ஸ்மார்ட் சிட்டி மக்களுக்கான திட்டமில்லை தனியாருக்கு லாபம் தரும் திட்டம்: சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கம் (சிஐடியு) பொதுச்செயலாளர் பி.சீனிவாசலு

ஸ்மார்ட் சிட்டி திட்டம் கடந்த 2013ல் உருவாக்கப்பட்டது. இந்த திட்டம் கடந்த 2016 முதல் தமிழகத்தில் சென்னை, கோவை, நெல்லை உட்பட பல மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. சென்னையில் மட்டும் ரூ.1000 கோடி ஒதுக்கீட்டின் கீழ் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதை செயல்படுத்த 7 துறையை சேர்ந்த இயக்குனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை கமிஷனர்தான் பொறுப்பு. இந்த திட்டத்தில் பொதுமக்களின் அனைத்து அம்சங்களையும் தருவது தான் நோக்கம். அது டாஸ்லெட் முதல் பசுமை  பூங்கா வரை என நீண்டு கொண்டே செல்லும்.   இந்த திட்டத்தை பற்றி ஆரம்பத்தில் என்ன நினைத்ேதாம் என்றால், சிட்டியை அழகுப்படுத்துவது மட்டுமின்றி, இங்குள்ள மக்களையும் மேம்படுத்துவதற்கு இந்த கோடிகள் பயன்படுத்தப்படும் என்று நினைத்தோம். ஆனால், போகபோகத்தான் தெரிகிறது இந்த திட்டம் என்பது வெறும் அழகுப்படுத்தும் வேலையை மட்டும்தான் செய்கிறது. இந்த திட்டம் முழுக்க, முழுக்க பெயிலியர் திட்டம் என்று பல இடங்களில் சொல்கிறார்கள். தி.நகருக்கு அடுத்தபடியாக நுங்கம்பாக்கத்தில் சாலையை எடுத்துக்கொண்டார்கள். அங்கு, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் நீக்கி விட்டனர். குப்பையை மறைப்பதற்காக கிரீன் ஷெட் கொண்டு வந்தனர். அதுவும் பெயிலியர். அதோடு, கடற்கரை சாலைகள் உட்பட பல இடங்களில் இ-சைக்கிள் திட்டம் கொண்டு வந்தனர். மழைநீர் வடிகால்வாய்களை ஒன்றுடன் ஒன்று தொடர்பு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக முயற்சி செய்து வருகின்றனர். மழை சேகரிப்பு செய்யவும் ஏற்படுகள் செய்து வருகின்றனர்.

அரசு அலுவலகங்களில் சில இடங்களில் மட்டும் சோலார் பேனல் போட்டார்கள். ஆனால், அதை பராமரிக்கவில்லை. நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில் சுற்றுச்சுவர் அமைப்பது, நடைபாதை அமைத்துள்ளனர். மேலும், நீர்நிலைகளில் பூங்காக்கள் அமைக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளனர். இப்போது பாலங்கள் அடியில் பூங்கா வைத்துள்ள திட்டம் மெகா தோல்வி திட்டம். செடிகள் பட்டு போய் கிடக்கிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டம் மக்களுக்கான திட்டமாக இல்லை. தனியாருக்கு லாபம் கிடைக்கும் திட்டமாக இருக்கிறது. இந்த திட்டத்தால் சென்னையில் ஆண்டாண்டு காலமாக வசித்து வரும் மக்களின் வாழ்வாதாரம் அதலபாதாளத்துக்கு சென்றுவிட்டது. உதாரணத்திற்கு, கூவம் கரையோரத்தில் அழகுபடுத்தப்போவதாக ஆயிரக்கணக்கான வீடுகளை எடுத்தனர். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குடிசை மாற்று வாரியம் சார்பில் வீடுகள் ஒதுக்கப்போவதாக தெரிவித்தனர். ஆனால், அதில், ஒரு பகுதியில் உள்ளவர்களுக்கு தான் வீடு. மற்றவர்களுக்கு இல்லை என்று கூறுகின்றனர்.  ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மக்களுக்கு பயன் இல்லை என்று கூறுகின்றனர் என்றால், அந்த திட்டத்தால் அவர்களுக்கு எந்த நன்மையும் தற்போது வரை கிடைத்து இருக்காது. அதனால்தான் அவர்கள் அப்படி கூறுகின்றனர்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை. இந்த திட்டத்தில் பாதாள சாக்கடை திட்டத்துக்கு நிதி ஒதுக்குகிறார்கள் என்றால் எந்த இடத்தில், எத்தனை கி.மீ, எவ்வளவு அகலத்தில், மதிப்பு என்ன, நன்மை என்ன என்பது தொடர்பாக எதையும் சொல்ல மறுக்கின்றனர். அதனால்தான் மக்கள் இப்படி பேசுகின்றனர். அவர்களுக்கு ஏதாவது தெரிந்தால் தான் இந்த திட்டத்தை பற்றி சொல்வார்கள். இந்த திட்டம் முழுமையடைந்த பிறகே பாருங்கள் என்று கூட மாநகராட்சி நிர்வாகம் கூறியிருக்கலாம்.

இந்த திட்டதால் சென்னையை சிங்கப்பூராக மாற்ற போவதாக கூறுகிறார்கள். சென்னையை முதலில் சென்னையாக ஆக்கினால் போதும் என்று கூறுகிறோம். எந்த திட்டத்திலும் வெளிப்படைத்தன்மை இல்லை. ஒரு வரன்முறை இருக்க வேண்டும். திடீரென பசுமை பூங்கா என்று கூறுகின்றனர். இதற்காக, கோடிகளை ஒதுக்குவதாக சொல்கின்றனர். ஆனால், அந்த இடத்தில் வைக்கப்பட்ட செடி பட்டு கீழே விழுந்தால், அதை காணோம் என்கின்றனர். அப்படியெனில் மக்களுக்கு சந்தேகம் வரத்தானே செய்யும். இந்த திட்டத்தில் சாலை போடுகிறார்கள். திடீரென, பாதாள சாக்கடைக்காக மீண்டும் சாலையை சுருக்குகின்றனர். இது பற்றி தெரிந்தே பல இடங்களில் வேண்டுமென்றே செய்கின்றனர்.

மெட்ரோ ரயில் நிலையம் வருகிறது என தெரிந்தே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பூங்காவை விரிவுபடுத்துகின்றனர். ஆனால், மெட்ரோ ரயில் நிலையத்துக்காக அந்த பூங்காவை தோண்டி போட்டு பழைய நிலைக்கு கொண்டு வந்து விட்டனர். இதனால், இப்பணிக்காக செலவிடப்பட்ட பணம் தான் வீணாகி போனது. இதுபோன்ற நடவடிக்கையால் மக்களுக்கு சந்தேகம் வருகிறது. இதுபோன்றுதான் குப்பையை மறைக்க கிரீன் ஷெட், இ-டாய்லெட், நம்ம டாய்லெட், சைக்கிள் நடைபாதை என இந்த திட்டத்தில் செய்த எல்லாம் பெயிலியராகி விட்டது. மக்கள் பயன்பாட்டுக்கு வராத இந்த திட்டம் பெயிலியர் திட்டம் என்றுதான் சொல்ல முடிகிறது. 100 சதவீதம் இது பம்மாத்து வேலை. பெருமுதலாளிகளுக்கும், குறிப்பிட்ட சதவீதத்துக்காக தான் இப்படி நிதியை போட்டு வீணடிக்கின்றனர்.

நாங்கள் கொரோனா காலங்களில் பீச் ஓரம் வசித்தவர்களை பிடித்து சாப்பாடு போட்டோம். அவர்களிடம் கேட்டபோது விவசாயம் இல்லாததால் சென்னை வந்து விட்டோம் என்று கூறுகின்றனர். எங்களுக்கு தூங்குவதற்கு இரவு நேர காப்பகத்தை திறந்து விடுங்கள் என்று கேட்கின்றனர். ஆனால், இந்த திட்டத்தில் கீழ் அதை செய்யவில்லை.

தமிழகம் முழுவதும் வேலை திண்டாட்டம் காரணமாக கிராமங்களில் இருந்து நகரங்களை நோக்கி மக்கள் வருகின்றனர். இதனால், மாநகரில் ஒவ்வொரு ஆண்டும் மக்கள் தொகை அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலை மாற வேண்டுமென்றால் முதலில் ஸ்மார்ட் வில்லேஜ் திட்டம் கொண்டு வர வேண்டும். இப்படி ஒரு திட்டம் செயல்படுத்தி அந்த திட்டத்தின் கீழ் கிராமங்களிலேயே வேலைவாய்ப்பு, அடிப்படை வசதிகள் செய்து கொடுத்தால் மாநகரங்களை நோக்கி மக்கள் நகர்வது குறையும். வேலைவாய்ப்பு கிடைத்தால் கிராமங்களில் இருந்து யாரும் வர மாட்டார்கள். எனவே, மக்கள் நகருவதை தடுக்க ஸ்மார்ட் வில்லேஜ் திட்டம் அவசியம் தேவை. முதலில் இதுபோன்ற திட்டத்தை கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Stories: