நாலா பக்கம்: புதுவை - கேரளா - மேற்கு வங்கம் - அசாம்

தேர்தல் புறக்கணிப்பில் பழங்குடியின மக்கள்

ஒத்திவைப்புபுதுச்சேரி,  வில்லியனூர் பெருமாள்புரத்தில் 30 ஆண்டுக்கு மேலாக அரசுக்கு  சொந்தமான இடத்தில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு இலவச  மனைப்பட்டா  வழங்கவில்லை. பழங்குடி மக்கள்  வசிக்கும்  இடம் அரசுக்கு சொந்தமான இடம் என்று அனைத்து ஆவணங்களும் கையில்  இருந்தும்,  கொடுக்கலாம் என்ற முகாந்திரம் இருந்தும் வில்லியனூர் கொம்யூன்  பஞ்சாயத்து  ஆணையரின் விடாப்பிடியாய் இலவச மனைப்பட்டா வழங்காமல் இருப்பதால்,  பழங்குடி  மக்கள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.

நீங்கள் செய்தால் சரி… நாங்க செய்தால் தவறா?

கேரளாவில் தற்காலிக ஊழியர்களின் பணி நிரந்தரம், அரசு பணியாளர்  தேர்வாணைய ரேங்க் பட்டியல்  ஆகியவற்றில் முறைகேடு நடந்திருப்பதாக எதிர்க்கட்சியான ஐக்கிய ஜனநாயக முன்னணி குற்றம்சாட்டி வருகிறது. ஆனால், இதற்கு பதிலே சொல்லாமல் ஆளும் இடது ஜனநாயக முன்னணி, தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்வதை திடீரென நிறுத்தி விட்டது. அதற்கு முதல்வர் பினராய் விஜயன் பதில் கூறும்போது, ``10 ஆண்டுகளுக்கு மேலாக தற்காலிக ஊழியர்களாக பணியாற்றியவர்களே மனிதாபிமான அடிப்படையில் நிரந்தரம் செய்யப்படுகின்றனர். குறிப்பிட்ட ஒரு பிரிவினரின் நலனை கருத்தில் கொண்டு பணி நிரந்தரம் செய்வது நிறுத்தப்பட்டுள்ளது. முந்தைய ஆட்சியாளர்கள், விதிகளை மீறி, விருப்பத்துக்கு தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்தனர். நீங்க பண்ணா சரி… அதையே நாங்க செஞ்சா தப்பா… என்று பொறிந்து தள்ளி விட்டாராம்.

மம்தாவுக்கு எதிராக களமிறங்கிய கவர்னர்

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தாவுக்கு எதிராக, அவருடைய சொந்த கட்சியினரையே திருப்பி விட்டுள்ளது பாஜ.இது போதாது என்று மாநில ஆளுநரான ஜெகதீப் தங்காரும் மம்தாவுக்கு எதிராக அரசியல் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். தங்காரை, மம்தாவும் கடந்த காலங்களில் அவமரியாதையாக நடத்தி இருக்கிறார். அதற்கு எல்லாம் சேர்த்து பழிவாங்குவது போல், தேர்தல் நெருங்கி விட்ட நிலையில் தங்காரும் மம்தாவுக்கு எதிராக அரசியல் பேச ஆரம்பித்து விட்டார். நேற்று பிரதமர் மோடி கலந்து கொண்ட விழாவில் பங்கேற்ற தங்கார், ‘மேற்கு வங்கத்தில் மக்கள் வாயை திறந்து பேசவே பயப்படுகின்றனர். இந்த நிலை மாற்றப்பட வேண்டும்,’ என்று பாஜ.வுக்கு மறைமுகமாக பிரசாரம் செய்தார்.

அந்த விஷயத்தை  கண்டுக்காதீங்க!

குடியுரிமை சட்டத்தை பெரும்பான்மையான மாநிலங்களிலுள்ள, பெரும்பான்மை மக்கள் எதிர்க்கவே செய்கிறார்கள். ஆனால், அசாமில் இது கலவையான எதிர்வினைகளை உருவாக்கியுள்ளது. அசாமின் வளங்களையும், வேலை வாய்ப்புகளையும் புதிதாகக் குடியேறியவர்கள் அபகரித்துக் கொள்வதாக அங்குள்ள பூர்வகுடியினர் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்கள். இதுமட்டுமின்றி 60 சதவிகித இந்துக்களைக் கொண்ட மாநிலமாகவும் அசாம் உள்ளது. இந்த தைரியத்தில்தான் பாஜ வேட்டையாடி விளையாடிக் கொண்டுள்ளது. ‘இந்த கணக்குகளையெல்லாம் உணராமல், மற்ற மாநிலங்களைப் போல் இங்கும் சிஏஏ எதிர்ப்பைக் கையாண்டால் மீண்டும் தோல்வியடையவே நேரிடும். எனவே சிஏஏ விஷயத்தில் தீவிரம் காட்டாமல் இருப்பதே நல்லது’ என்று காங்கிரஸை அரசியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

Related Stories: